கீழவெண்மணியில் நேற்று நடை பெற்ற 50-ம் ஆண்டு தியாகிகள் நினைவு தின நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் தியாகிகள் ஸ்தூபிக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள கீழவெண்மணியைச் சேர்ந்த விவசாய தொழிலாளர்கள் தாங்கள் வேலை செய்த நிலத்தின் உரிமையாளர், கோபாலகிருஷ்ண நாயுடுவிடம் அதிக கூலி கேட்டனர். அவர் தர மறுக்கவே, வயலில் வேலை செய்ய மறுத்ததுடன் வெளியூர் ஆட்களைக் கொண்டும் வேலை அங்கு நடைபெறுவதையும் தடுத்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த கோபாலகிருஷ்ண நாயுடு மற்ற பண்ணையார்களுடன் சேர்ந்து கீழ வெண்மணியைச் சேர்ந்த விவசாய தொழிலாளர்களை அடித்து உதைத்தார். இதையடுத்து, 1968 டிச.25-ல் இரவு 9 மணியளவில், அந்த கிராமத்தைச் சேர்ந்த ஆண் விவசாயத் தொழிலாளர்கள் தங்கள் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள், குழந்தை கள் என 44 பேரை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டி, ராமையன் என்பவரது குடிசை வீட்டில் வைத்து, வெளியே பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டனர்.
இந்நிலையில், தொழிலாளர்களைத் தேடி வந்த பண்ணையாரின் ஆட்கள், ராமையனின் வீட்டில் ஆட்கள் இருப்பதை அறிந்து, குடிசை வீட்டுக்கு தீ வைத்தனர். வெளியே பூட்டப்பட்டிருந்த நிலையில் உள்ளி ருந்து வெளிவரமுடியாமல் பெண்கள், குழந்தைகள் என 44 பேரும் பலியானார்கள். இச்சம்பவம் நடந்து 50 ஆண்டுகள் ஆகிறது.
இதையொட்டி, கீழவெண்மணியில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 50-ம் ஆண்டு தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் நாகை மாலி தலைமை வகித்தார். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கட்சிக் கொடியை ஏற்றி, தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினரும் முன்னாள் எம்எல்ஏவுமான அ.சவுந்தரராஜன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோர், திமுக உள்ளிட்ட கட்சியினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.