அந்தமான் அருகே புதிய காற்ற ழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
தெற்கு அந்தமான் பகுதி, அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. அதன் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இலங்கை அருகே நீடித்து வந்த காற்றழுத்த தாழ்வுநிலை தற்போது குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதியில் நிலவி வருகிறது. அதன் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, புறநகர் பகுதியில் வானம் பொதுவாக மேடமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பில்லை.
திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது. மணிமுத்தாறு, புதுச்சேரி, மரக்காணம், திண்டிவனம், சீர்காழி, வேதாரண்யம், செய்யூர், மாமல்லபுரம் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.