கோடம்பாக்கம் பகுதியில் செல்போன் பறிப்புச் சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரை போலீஸார் கைது எய்தனர். அவர்களிடமிருந்து 5 செல்போன்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கர்நாடகா மாநிலம் பீமாசமுத்ராவைச் சேர்ந்தவர் விஸ்வநாதா. இவர் கடந்த செப்டம்பர் மாதம் 11-ம் தேதி அன்று சென்னை வந்து தனது உறவினரை பார்த்துவிட்டு, கோடம்பாக்கம், லிபர்டி தியேட்டர் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது அங்கு இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு நபர்கள் விஸ்வநாதாவிடமிருந்து செல்போனைப் பறித்துக்கொண்டு தப்பினர். இது குறித்து விஸ்வநாதா ஆர்-2 கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது,
ஆர்-2 கோடம்பாக்கம் காவல் நிலைய போலீஸார் விசாரணை செய்து மேற்படி செல்போன் பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட மேல் அயனம்பாக்கத்தைச் சேர்ந்த மங்களநாதன் (26), புவனேஸ்வர் நகரைச் சேர்ந்த செல்வமணிகண்டன் (25), வடபழனியைச் சேர்ந்த ரமேஷ் 25), ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த நாச்சி (எ) ராஜேஷ் (25) ஆகிய 4 நபர்களைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 செல்போன்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட நான்கு நபர்களும் சேர்ந்து கோடம்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 4 நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.