தமிழகம்

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் வங்கிப் பணிகள் பாதிப்பு: ரூ.7 ஆயிரம் கோடி காசோலைகள் தேக்கம்

செய்திப்பிரிவு

வங்கிகளை இணைக்கக்கூடாது, வாராக்கடன்களை வசூலிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் உட்பட நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டன.

பாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகியவற்றை ஒரே வங்கியாக இணைக்கக்கூடாது, வங்கிகளில் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும், வாராக்கடன்களை வசூலிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் நேற்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் ஈடுபட்டனர். சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு ஆகியவற்றின் தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள், அதிகாரிகள், தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளனத்தைச் சேர்ந்தவர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கப் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் பேசியதாவது:-

வங்கிகள் இணைப்புக் கொள்கையை கைவிட வேண்டும். ‘நாட்டில் சிறியதாக 21 அரசு வங்கிகள் இருக்க வேண்டாம். அவற்றை இணைந்து 4 அல்லது 5 பெரிய வங்கிகளாக பலம் வாய்ந்தவையாக உருவாக்க வேண்டும். அப்போதுதான் வங்கிகள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவ முடியும்’ என்று மத்திய அரசு சொல்கிறது. பாரத ஸ்டேட் வங்கியில் அதன் துணை வங்கிகள் 6-ஐ மூடி பாரத ஸ்டேட் வங்கியோடு இணைத்தனர். அதனால் அந்த வங்கி பலம் வாய்ந்த வங்கியாக மாறி, லாபத்துடன் இயங்குவதற்குப் பதிலாக நஷ்டம் ஏற்பட்டது. வாராக்கடன் ரூ.1 லட்சத்து 77 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது.

இந்தியா முழுவதும் நடைபெற்ற இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் 21 அரசு வங்கிகள், 12 தனியார் வங்கிகளின் 88 ஆயிரம் கிளைகளில் பணிபுரியும் 10 லட்சம் ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் மட்டும் 15 ஆயிரம் வங்கிக் கிளைகளில் பணியாற்றும் 80 ஆயிரம் ஊழியர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர். சென்னை யில் உள்ள காசோலை பரிவர்த்தனை மையத்தில் மட்டும் ரூ.7 ஆயிரம் கோடி மதிப்புள்ள 9 லட்சம் காசோலைகள் தேங்கி யுள்ளன.

இவ்வாறு சி.எச்.வெங்கடாசலம் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் தமிழ்நாடு பொதுச் செயலாளர் இ.அருணாசலம், இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி ஊழியர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் பாலாஜி, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் வங்கிச் சேவைகள் முற்றிலுமாக ஸ்தம்பித்தன.

SCROLL FOR NEXT