இந்திய அளவில் நடைபெறும் போட்டித் தேர்வுகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் முன்னிலை பெற்று வருகின்றனர் என்று ரேஸ் பயிற்சி மைய இயக்குநர் பரத் சீமான் தெரிவித்தார்.
அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, சென்னை தி.நகரில் உள்ள ரேஸ் பயிற்சி மையத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
அப்போது தேர்வுகள் குறித்த அறிவிப்பை தெரிந்துகொள்ளும் விதம், தேர்வுக்குத் தயாராக தெரிந்திருக்க வேண்டிய விவரங்கள் பற்றி மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் வங்கியின் முன்னாள் மூத்த அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
அவர்கள் கூறும்போது, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகம் பேர் வங்கிப் பணிகளில் சேருவதாகவும், தமிழ் வழியில் பயில்வோர் அதிக பணி வாய்ப்புகளைப் பெறுவதாகவும், அதுகுறித்த விழிப்புணர்வும் அதிகரித்துள்ளதாகவும் கூறினர். ஆண்டுதோறும் குறைந்தது 20 போட்டித் தேர்வுகள் நடப்பதால் மாணவர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றனர். வரும் 2019-ம் ஆண்டில் நடக்கவுள்ள தேர்வுகள், அவற்றை எதிர்கொள்ளும் முறைகள் குறித்தும் அதிகாரிகள் விளக்கினர்.
கடந்த ஆண்டு ரேஸ் பயிற்சியகத்தில் பயின்று, தேர்வில் வென்று, பணியில் அமர்ந்த வங்கி அதிகாரிகள் பலர், தாங்கள் தேர்வை வெல்ல பின்பற்றிய வழக்கங்கள், பயின்ற முறை, பயிற்சிக்காக பயன்படுத்திய இணைய தள முகவரிகள் உள்ளிட்ட விவரங்களை மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டனர்.