தமிழகம்

ஜிசாட் 7ஏ 19-ல் விண்ணில் பாய்கிறது

செய்திப்பிரிவு

இந்திய எல்லைப் பகுதிகளில் தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்துவது உள்ளிட்ட ராணுவப் பயன்பாட்டுக்கான அதிநவீன ஜிசாட் - 7ஏ செயற்கைக் கோளை இஸ்ரோ உருவாக்கியுள்ளது.

இந்த செயற்கைக் கோள் ஜிஎஸ்எல்வி - எஃப்11 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து வரும் 19-ம் தேதி மாலை விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

ஜிசாட் - 7ஏ செயற்கைக் கோளின் மொத்த எடை 2,250 கிலோ. இது குறைந்தபட்சம் 170 கி.மீ. தூரமும், அதிகபட்சம் 40,900 கி.மீ. தூரமும் கொண்ட புவி சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது. அதிநவீன தொழில்நுட்பக் கருவிகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜின் இதில் பயன்படுத்தப் படுகிறது. இது முழுவதும் க்யூ பேண்ட் பயனாளர்களின் தொலைத்தொடர்புக்கு உதவக்கூடியது. இதை இந்திய ராணுவத்துக்கு இஸ்ரோ அர்ப்பணிக்க உள்ளது.

‘டிரோன்’ வகையைச் சேர்ந்த ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிப்பது மற்றும் போர்க்காலங்களில் வான்வழி தாக்குதல் பணிகளுக்கு இந்த செயற்கைக் கோள் பெரிதும் பயன்படும். இந்திய ரேடார் கட்டுப்பாட்டு மையங்களுக்கு விமானங்களின் இருப்பிடத்தையும் இது துல்லியமாகக் காட்டும். சுமார் ரூ.800 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் ஆயுட்காலம் 8 ஆண்டுகள் ஆகும்.

SCROLL FOR NEXT