தமிழகம்

வேலூர் சிறையில் நளினி உண்ணாவிரதம் வாபஸ்

செய்திப்பிரிவு

சிறையில் மீண்டும் தொடர்ந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நளினி புதன்கிழமை வாபஸ் பெற்றுக்கொண்டார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் சுகாதாரம் இல்லாத குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது, சக பெண் கைதிகள் தன்னை சந்திக்க அனுமதி மறுக்கப்படுகிறது, மேலும் வார்டர்களால் மிரட்டப்படுவதாகவும் நளினி புகார் தெரிவித்தார். இதனை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை முதல் நளினி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.

இதையடுத்து, சென்னை சிறைத்துறை டிஐஜி ராஜேந்திரன் புதன்கிழமை வேலூர் மத்திய சிறையில் நளினியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் முடிவில் மாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை நளினி கைவிட்டார்.

இதுகுறித்து, டிஐஜி ராஜேந்திரன் கூறியதாவது: ‘‘பெண்கள் சிறையில் கைதிகளுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க மினரல் வாட்டர் பிளான்ட் அமைக்கும் பணி விரைவில் முடிகிறது. அதுவரை ஆண்கள் மத்திய சிறையில் இருந்து தினமும் ஒரு லோடு தண்ணீர் சப்ளை செய்யப்படும். சக கைதிகள் நளினியை சந்திக்க தடையில்லை.

வெளியில் இருந்து கொண்டுவரப்படும் உணவுகள் சிறை விதிகளுக்கு உட்பட்டிருந்தால் தடையின்றி வழங்கப்படும். நளினி படிப்பதற்கான வசதிகள் செய்து தரப்படும். அவரது கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால் உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டார்’’ என்றார்.

SCROLL FOR NEXT