தமிழகம்

மீனவர் பிரச்சினை: மத்திய அரசு மீது சென்னை உயர் நீதிமன்றம் நம்பிக்கை

செய்திப்பிரிவு

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு மத்திய அரசு உரிய தீர்வு காணும் என நம்பிக்கை தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பான பொதுநல வழக்கை முடித்துவைத்து உத்தர விட்டது.

சென்னையைச் சேர்ந்த மீனவர் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் எல்.டி.ஏ.பீட்டர் ராயன் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். ‘‘இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றனர், கைது செய்யப்படுகின்றனர். இதை தடுக்கவும், கச்சத்தீவு உள்ளிட்ட கடல் பகுதிகளில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை உறுதிப்படுத்தவும், மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று அதில் அவர் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் செவ் வாய்க்கிழமை விசாரணை நடத் தினர்.‘‘இந்த விவகாரத்தில் அதிக பட்சம் சாத்தியமான தீர்வை எட்ட அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் இந்த கருத்தைப் பதிவு செய்து கொள்கிறோம். மத்திய அரசு இப்பிரச்சினையில் நிச்சயம் போதிய கவனம் செலுத்தும். மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க உரிய தீர்வு காணும் என்று நம்புகிறோம்’’ என்று கூறிய நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT