10-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு கல்வி உதவித் தொகை ரூ.500-லிருந்து ரூ.1,250 ஆக அதிகரிக்கப்படுகிறது. இது, நடப்பு ஆண்டிலிருந்து அமலுக்கு வருகிறது.
படிப்பில் சிறந்து விளங்கும் 10-ம் வகுப்பு மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களின் கல்வித்திறனை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு ஆண்டுதோறும் 1,000 பேரை தேர்வுசெய்து கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது.
இதற்காக தேசிய திறனாய்வுத் தேர்வு என்ற சிறப்பு தேர்வை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) நடத்துகிறது. முதலில் மாநில அளவில் முதல்கட்ட தேர்வும், அதில் தேர்ச்சி பெறுவோருக்கு தேசிய அளவில் 2-வது கட்ட தேர்வும் நடத்தப்படும். 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதலாம்.
அதன்படி, அவர்கள் பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும்போது கல்வி உதவித் தொகையாக மாதந்தோறும் ரூ.500 வழங்கப்படும். அதேபோல், மேற்படிப்பு மற்றும் பிஎச்டி படிக்கும்போதும் படிக்கின்ற படிப்புக்கு ஏற்றாற்போல் குறிப்பிட்ட கல்வி உதவித் தொகை மாதந்தோறும் அளிக்கப்படும்.
இந்த நிலையில், தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான கல்வி உதவித் தொகையை இந்த ஆண்டு முதல் உயர்த்தி என்.சி.இ.ஆர்.டி. அறிவித்துள்ளது. அதன்படி, தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றிபெறும் மாணவர்கள் பிளஸ்-1, பிளஸ்-2 படிக்க வழங்கப்படும் கல்வி உதவித் தொகை ரூ.500-லிருந்து ரூ.1,200 ஆகவும், பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு உதவித் தொகை ரூ.2,000 ஆகவும் அதிகரிக்கப்படும்.
இந்த ஆண்டுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வின் முதல்கட்ட தேர்வு தமிழ்நாட்டில் நவம்பர் 2-ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வை அரசு தேர்வுத்துறை நடத்துகிறது. இதற்கு ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதிக்குள் பள்ளி தலைமை ஆசிரியர் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். தேசிய அளவிலான 2-வது கட்ட தேர்வு அடுத்த ஆண்டு மே மாதம் 10-ம் தேதி நடைபெறும்.