தமிழகம்

திமுக நிவாரண நிதி ரூ.1 கோடி: முதல்வரிடம் நேரில் வழங்கினார் துரைமுருகன்

செய்திப்பிரிவு

கஜா புயல் பாதிப்புக்கு நிவாரண நிதியாக ரூ.1 கோடியை முதல்வர் பழனிசாமியிடம் திமுக பொருளாளர் துரைமுருகன் நேரில் வழங்கினார்.

கஜா புயல் பாதிப்பால் 6 மாவட்ட மக்கள் கடும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசியல் கட்சிகள், கலைத்துறையினர், பொதுமக்கள் நிவாரண நிதியை வழங்கி வருகின்றனர். திமுக சார்பில் ரூ.1 கோடி முதல்வர் நிவாரண நிதிக்கு அளிக்கப்பட்டது.

இது குறித்து திமுக சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கஜா புயல் மற்றும் கனமழையால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து, விவசாயிகள், மீனவர்கள், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் பெருந்துயரத்திற்கும், மிகக் கடுமையான சேதத்திற்கும் உள்ளாகியிருக்கிறார்கள்.

புயலும் மழையும் பொதுமக்களின் வாழ்க்கை நிலையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறது. வரலாறு காணாத சேதங்களில் இருந்து மக்களை மீட்டெடுக்கத்தேவையான நிவாரணம், மறு சீரமைப்பு மற்றும் மறுகட்டமைப்புப் பணிகளுக்கு உதவிட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  வேண்டுகோள் விடுத்திருந்தார்.

மேலும் நிவாரணப் பணியில் ஈடுபடும்  அதே வேளையில் நிவாரண நிதியாக, திமுக அறக்கட்டளையிலிருந்து ஒரு கோடி ரூபாய் நிதியுதவியாக அளிக்கப்படும் என அறிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து  இன்று திமுக பொருளாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன் மற்றும்  துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ பி.கே.சேகர்பாபு ஆகியோர் திமுக அறக்கட்டளை  சார்பில் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையினை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம்  நேரில் சந்தித்து வழங்கினர்.

SCROLL FOR NEXT