'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குனர் கிர்லோஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
‘கஜா’ புயல் நேற்று முன்தினம் கரையைக் கடந்த நிலையில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வீசிய பலத்த காற்றினாலும், பெய்த கன மழையினாலும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
சேதமடைந்த வீடுகளை மக்கள் தாங்களாகவே சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் ஏதுமின்றி மீள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
புதுக்கோட்டை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் 12,371 மின்வாரிய பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. திருச்சி மாவட்டத்தில் ஆயிரம் மின்கம்பங்களும், திண்டுக்கல் மாவட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் சேதமடைந்துள்ளன.
நிவாரணப் பணிகள், மீட்புப் பணிகள், சீரமைப்புப் பணிகள் விரைவாக நடந்து வரும் நிலையில் அப்பணிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக 'கஜா' புயலால் பாதிப்பு அடைந்துள்ள தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குனர் கிர்லோஷ் குமார் வெளியிட்ட உத்தரவில், '' ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மதுக்கடைகளை மூட வேண்டும். மறு உத்தரவு வரும்வரை மதுக்கடைகளை திறக்கக்கூடாது’’ என்று தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 800க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.