கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், சென்னை கே.கே. நகர் இஎஸ்ஐ மருத்துவ கல்லூரியில் 4-ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி இருக்கிறார். இந்த மாணவியை அங்கு காவலாளியாகப் பணிபுரிந்து வந்த அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கணேசன் என்பவர் தன்னை காதலிக்கும்படி அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தார்.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் மாணவி அளித்த புகாரின்பேரில், கணேசன் கடந்த மார்ச் மாதம் பணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவிக்கு கணேசன் மிரட்டும் தொனியில் கடிதம் எழுதியிருந்தார். இதுகுறித்து மாணவி தனது தந்தைக்கும் கல்லூரி நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாணவியைப் பார்க்க கல்லூரிக்கு வந்த கணேசனை, மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் எம்ஜிஆர் நகர் போலீஸார் கைது செய்தனர். கணேசன் ராணுவத்தில் பணிபுரிந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.