தமிழகம்

திடக்கழிவு மேலாண்மையை கண்காணிக்கும் பசுமை தீர்ப்பாய அலுவலகம் சென்னையில் திறப்பு

செய்திப்பிரிவு

திடக்கழிவு மேலாண்மை விதிகள் செயல்படுத்தப்படுவதை கண் காணிக்க தேசிய பசுமைத் தீர்ப் பாயத்தால் அமைக்கப்பட்டுள்ள தென்மண்டல கண்காணிப்பு குழு வின் அலுவலகம் சென்னையில் திறக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு திடக்கழிவு மேலாண்மையை முறையாக மேற்கொள்ளாதது முக்கிய சவாலாக இருந்து வருகிறது. கடந்த காலங்களில் பல்வேறு நோய் பரவலுக்கு திடக்கழிவு மேலாண்மையில் உள்ள குறைபாடுகளே காரணம் என தெரியவந்துள்ளது. இதற்கிடையே, திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்குகள் அண்மையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துக்கு மாற்றப்பட்டன.

மேலும், கடந்த 2016-ம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்ட திடக்கழிவு மேலாண்மை விதிகள் குறித்து, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தயாரித்துள்ள ஆண்டறிக்கையில், பெரும்பாலான மாநிலங்களில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்துவதில் குறைபாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் டெல்லி, கொல்கத்தா, போபால், புனே, சென்னை ஆகிய இடங்களில் திடக்கழிவு மேலாண்மை கண்காணிப்புக் குழுக்களை தேசிய பசுமை தீர்ப்பாயம் உருவாக்கியுள்ளது.

தென்மண்டல தலைவர்

தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, அந்தமான்- நிகோபார் யூனியன் பிரதேசங்களுக்கான தென்மண்டல கண்காணிப்புக் குழு தலைவராக, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முன்னாள் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி பி.ஜோதிமணி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தக் குழு, தென்மாநில நகரங்களில் திடக்கழிவு மேலாண்மை திட்ட விதிகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பது குறித்து கண்காணித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துக்கு அறிக்கை அளிக்க உள்ளது.

இக் குழுவுக்கான அலுவலகம், சென்ன கீழ்ப்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புதிய அலுவலகத்தை நீதிபதி பி.ஜோதிமணி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் ஹர்மந்தர் சிங், மாநகராட்சி துணை ஆணையர் (சுகாதாரம்) பி.மதுசுதன் ரெட்டி, தலைமைப் பொறியாளர் (கட்டிடம்) என்.மகேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT