நூறு நாள் வேலை உறுதித் திட்ட தில் இறந்தவர்கள் பெயருக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து வரும் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது.
வேலூரில் ஆம் ஆத்மி கட்சியின் மாநில பிரச்சாரக் குழுவைச் சேர்ந்த ஜெயராமன் வெங்கடேசன் செவ்வாய்க்கிழமை நிருபர்களிடம் கூறும்போது, ‘‘கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நாகல் கிராம ஊராட்சியில் நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தில் இறந்தவர்களின் பெயருக்கு சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த கஜேந்திரன் (52) என்பவர் கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல்7-ம் தேதி இறந்துவிட்டார். ஆனால், அவர் 2011-ம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி
முதல் 2012-ம் ஆண்டு ஆக்ஸ்ட் 18-ம்தேதி வரை 52 நாட்கள் பணியாற்றிய தாக கணக்கு காட்டி ரூ.7,416 மோசடிசெய்யப்பட்டுள்ளது. இதேபோல இறந்துபோன 15 நபர்களின் பெயரில் பணம் சுருட்டப்பட்டுள்ளது.
தமிழரசன் என்பவரது பாட்டி காமாட்சி என்பவருக்கு கடந்த 2007-08-ம் ஆண்டு இந்திரா நினைவுக் குடியிருப்பு திட்டத்தின்கீழ் வீடு கட்டிக்கொள்ள அனுமதி கிடைத்தது. இதுவரை வீடு கட்டிக் கொடுக்கப்படவில்லை. ஆனால், அவருக்கு வீடு கட்டிக் கொடுத்திருப்பதாக கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத் தகவல் கூறுகிறது. கடந்த ஆட்சியில் பாலாசேட் என்பவர், ஊராட்சித் தலைவராக இருந்தார். தற்போது, அவரது மனைவி ஜெயந்தி ஊராட்சித் தலைவராக இருக்கிறார்.
ஆம் ஆத்மியின் உறுப்பினரான தமிழரசன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த ஊழல் தொடர்பான உண்மைகளை வெளியே கொண்டுவந்துள்ளார். இதனால், ஜெயந்தியின் கணவர் பாலாசேட் ஆட்களை வைத்து தமிழரசனை மிரட்டிவருகிறார். கடந்த 1-ம் தேதி ஊர்த் திருவிழாவில் தமிழரசன் மீது பாலாசேட்டின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுகுறித்து, கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. நாகல் ஊராட்சி நிர்வாகத்தின் ஊழலைக் கண்டித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். வரும் சனிக்கிழமை பொதுமக்களை திரட்டி நாகல் கிராமத்தில் உண்ணாவிரதம் இருப்போம்’’ என்றார்.
இந்த குற்றச்சாட்டு குறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி இயக்குநர் சீனிவாசன் கூறும்போது, ‘‘நாகல் ஊராட்சியில் முறைகேடு குறித்த புகார் ஏற்கெனவே வந்துள்ளது. ஊராட்சித் தலைவரை தகுதி நீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஊராட்சிகளின் உதவி இயக்குநருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதுகுறித்த பதில் அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை. நூறு நாள் வேலைத் திட்டத்தில் மோசடி குறித்து பட்டியல் கொடுத்தால் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.