ரயில் கொள்ளை வழக்கில் கைதாகியுள்ள 5 பேரின் நீதிமன்ற காவல் டிசம்பர் 11-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
2016 ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் ரூ.5.78 கோடி பணம் கொள்ளைய டிக்கப்பட்டது. இதுதொடர்பாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த மோஹர்சிங், ருசிபார்த்தி, காலியா என்ற கிருஷ்ணா, மகேஷ்பார்த்தி, பில்தியா என்ற பிரஜ்மோகன், ஆகிய 5 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அவர்களை 14 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீஸார் விசாரித்தனர். புழல் சிறையில் அடையாள அணிவகுப்பும் நடத்தப்பட்டது.
இந்நிலையில் கொள்ளை யர்களின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து 5 பேரையும் சிபிசிஐடி போலீஸார் நேற்று சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி பிரகாஷ் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். 5 பேரின் நீதிமன்ற காவலை வருகிற 11-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.