காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி சத்திரம் பகுதியில் முன்விரோதத்தால் நிகழ்ந்த கொலைக்கு பழிவாங்கும் வகையில் 10-ம் வகுப்பு மாணவி ஒருவரை 5 பேர் கொண்ட மர்மகும்பல் வியாழக்கிழமை காரில் கடத்தியது. எனினும், அதைக்கண்ட பொதுமக்கள் காரை விரட்டிச் சென்றதால், மாணவியை தாமல் ஏரிக்கரை பகுதியில் இறக்கிவிட்டு மர்மகும்பல் தப்பிச் சென்றது.
காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி சத்திரம் அண்ணாநகரை சேர்ந்த அருணகிரி என்பவரின் மகன் சந்துரு (18). இவருக்கும், அதேபகுதியைச் சேர்ந்த டேனியல் (23) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இதில், டேனியல் சந்துருவை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றார். இந்நிலையில் மர்மகும்பல் ஒன்று டேனியலை கீழம்பி பகுதியில் வெட்டி கொலை செய்தது. இந்த கொலை தொடர்பாக 8 பேரை பாலுசெட்டி சத்திரம் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே 10-ம் வகுப்பு படித்து வரும் அருணகிரியின் மகள், வழக்கம்போல வியாழக்கிழமை பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தார். பாலுசெட்டி சத்திரம் பகுதி சாலையில் சென்றுகொண்டிருந்த மாணவியை 5 பேர் கொண்ட மர்மகும்பல் காரில் கடத்தியது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் காரை விரட்டிச் சென்றனர்.
பொதுமக்கள் விரட்டுவதைக் கண்ட மர்மகும்பல் தாமல் பகுதியில் உள்ள ஏரிக்கரை அருகே மாணவியை காரில் இருந்து கீழே இறக்கிவிட்டு தப்பி சென்றது. தகவல் அறிந்த பாலுசெட்டி சத்திரம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது, ‘கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரித்ததில் காரில் 5 பேர் இருந்ததாகவும், பாலியல் பலாத்காரம் செய்து விடுவோம் என மிரட்டியதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார். சிறுமி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து கடத்தல் கும்பலை தேடிவருகிறோம்’ என்று தெரிவித்தனர்.
முன்விரோதம் காரணமாக அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் குற்றச் சம்பவங்களால் பாலுசெட்டி சத்திரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்காததாலேயே இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதாக கூறி பாலுசெட்டி சத்திரம் கிராம மக்கள் மற்றும் மாணவியின் உறவினர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.