சென்னை மெரினா கடற்கரையில் இரவில் உறங்கிக் கொண்டிருந்த மீனவர்கள் இருவரை போலீஸார் தாக்கியதில் ஒருவர் கை, கால் முறிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை கிருஷ்ணாம்பேட்டையைச் சேர்ந்தவர்கள் கந்தன், பிரேம்குமார். இருவரும் அப்பகுதியில் மீனவர்களுக்கு வலை பின்னிக் கொடுப்பது, மீன் பிடிப்பில் உதவுவது போன்ற வேலைகளைச் செய்து வந்தனர்.
இதில் கிடைக்கும் சொற்பக் கூலியை வைத்து வாழ்க்கையைத் தள்ளி வந்தனர். அதிகாலையில் படகுகள் கரை திரும்பும் என்பதால் கடற்கரை மணலில் உறங்குவது இவர்கள் வழக்கம். அதேபோன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல் காந்தி சிலை பின்புறம் கடற்கரை மணலில் உறங்கியுள்ளனர்.
பொழுது விடியும் நிலையில் திங்கட்கிழமை அதிகாலை 4 மணி அளவில் மெரினா காவல் நிலையத்தைச் சேர்ந்த 3 போலீஸார் தடியுடன் அவர்களைத் தட்டி எழுப்பியுள்ளனர். தூக்கக் கலக்கத்திலிருந்த அவர்களை எழுப்பி, ''என்னடா எழுந்திருக்க இவ்வளவு நேரமா?'' எனக் கேட்டு கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
கந்தன் மீது தொடர்ச்சியாக அடி விழ அவர் கை, கால்கள் முறிந்தன. அடிதாங்க முடியாமல் சாலையில் ஓடிய பிரேம்குமாரைத் துரத்தி துரத்தி லத்தியால் தாக்கியுள்ளனர். காவலர்கள் ஒருவரை மிருகத்தனமாக தாக்குவதை நடைப்பயிற்சிக்கு வந்தவர்கள் கண்டு அதிர்ச்சியடைந்து போலீஸாரைத் திட்டி மீட்டுள்ளனர்.
பின்னர் எழுந்து கூட நிற்கமுடியாத நிலையில் இருந்த கந்தன், பிரேம்குமார் ஆகிய இருவரையும் ஆம்புலன்ஸில் ஏற்றி ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மருத்துவர்கள் கந்தனுக்கு இரண்டு கால்கள், கைகள் முறிந்துள்ளதாகத் தெரிவித்தனர்.
போலீஸாரின் மனிதாபிமானமற்ற செயலால், வாழ்வாதாரத்துக்குத் தவிக்கும் கந்தனின் குடும்பம் இன்று மருத்துவமனையில் கண்ணீரும் கம்பலையுமாக நிற்கிறது. இதுவரை கந்தனையும், பிரேம்குமாரையும் போலீஸார் மருத்துவமனை வந்து பார்க்கவில்லை என்று கூறுகின்றனர்.