பெரம்பூர் ஸ்டீபன் சாலையில் வட இந்திய இளைஞர் சென்ற இருசக்கர வாகனம் சறுக்கி விழுந்ததில் பின்னால் வந்த பேருந்து ஏறி உயிரிழந்தார், தொடர் விபத்து குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மறியல் போராட்டம் நடத்தி கைதாகினர்.
ஓட்டேரி ஸ்டீபன்சன் சாலையில் நார்த் டவுன் அபார்ட்மென்ட் என்கிற தனியார் அபார்ட்மென்ட் உள்ளது. இங்கு வசித்தவர் அம்புக் கதி தியா (37). இவர் இன்று காலை 9.30 மணி அளவில் தனது அபார்ட்மென்டிலிருந்து சாலை நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் வெளியே வந்துள்ளார்.
சாலை சேறும் சகதியுமாக இருந்த நிலையில் அவர் சென்ற இருசக்கர வாகனம் சறுக்கியதால் கீழே விழுந்தார். அவர் விழுந்த வேகத்தில் பின்னால் வந்த மாநகரப் பேருந்து அவர் தலைமீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே அம்புக் பலியானார்.
அவர் ஹெல்மட் அணிந்து முறையாகச் சென்றும் சாலையில் இருந்த சேறும் சகதியுமான நிலை வாகனத்தை கீழே விழ வைத்ததில் அநியாயமாக அவருடைய உயிர் போனது. விபத்தில் இளைஞர் உயிரிழந்ததை அடுத்து அந்த அப்பார்ட்மென்டிலிருந்த பெண்கள், ஆண்கள் அனைவரும் கொதித்துப்போய் சாலையில் வந்து மறியலில் ஈடுபட்டனர்.
பின்னி மில் பகுதி அமைந்துள்ள ஸ்டீபன்சன் சாலையில் பக்கத்தில் உள்ள கட்டுமான நிறுவனத்துக்குச் சொந்தமான மண் லாரிகள் அதிக அளவில் செல்வதாகவும் அதனால் அதிக அளவில் சாலையில் சிதறும் மண் சகதியாக மாறுவதாகவும் அப்போது சாலையில் பயணம் செய்யும் இருசக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி விழுவதாகவும் அப்பகுதி மக்கள் தொடர் புகார்களை அளித்திருந்தனர்.
பலமுறை புகார் அளித்தும் போலீஸாரோ, போக்குவரத்து போலீஸாரோ கண்டுகொள்வதில்லை என அவர்கள் குற்றம் சாட்டினர். கடந்த 7 மாதங்களில் சகதியில் சறுக்கி விழுந்து 6 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறிய பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு நியாயம் வேண்டும் என கோஷமிட்டுச் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காவல் உயர் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து போகாததால் மறியலில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.
போலீஸார் பாதிக்கப்பட்ட மக்களிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதாகவும், பெண்கள், வயதான ஆண்களை சாலையில் பிடறியைப் பிடித்து தள்ளிவிட்டு குற்றவாளிகளைப்போல் நடத்தியதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
சமூகத்தில் மதிப்புடன் இருக்கும் தங்களை சாலையில் ஏற்படும் தொடர் அலட்சியம் காரணமாக அநியாயமாக ஒரு உயிர் போனது அறிந்தும் தீர்வுக்காகப் போராடும் தங்களை இவ்வாறு நடத்தியது மனித உரிமை மீறல் என்று அங்குள்ளவர்கள் வருத்தமுடன் பதிவு செய்தனர்.