குடிசையை விட்டு விரட்டும் அதிகாரிகளிடமிருந்து எங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று ஓய்வுபெற்ற ராணுவ வீரர் பெருமாள், திருவண்ணாமலை ஆட்சியரைச் சந்தித்து மனு அளித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த மண்டகொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (92). இந்திய ராணுவத்தில் 26 ஆண்டுகள் பணியாற்றிய இவர் சீனப்போர், பாகிஸ்தான் போர்களில் பங்கேற்றவர். கடந்த 1979-ம் ஆண்டு ஓய்வு பெற்ற பெருமாள், தனது மனைவியுடன் மண்டகொளத்தூர் பகுதியில் உள்ள ஒரு குடிசையில் 40 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.
ராணுவ ஓய்வூதியம் தவிர வேறு எந்த உதவியும், ஆதரவும் இல்லாத நிலையிலும் நிம்மதியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் பெருமாளுக்கு சேத்துப்பட்டு பிடிஓ மூலம் ஓர் உத்தரவு வந்துள்ளது. நீங்கள் குடியிருக்கும் குடிசை அரசுக்குச் சொந்தமான இடம். அதனால் அந்த இடத்தை உடனே காலி செய்யுங்கள் என்று ஓய்வுபெற்ற 92 வயது ராணுவ வீரரிடம் கடுமை காட்டப்பட்டுள்ளது.
வயதான காலத்தில் நாங்கள் எங்கு செல்வோம் என்று கேட்டபோது அதெல்லாம் தெரியாது என்ற பதிலே வந்தது. இதனால் மனவேதனை அடைந்த பெருமாள், தாங்கள் வசித்து வரும் பகுதிக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக அளித்தார்.
மனுவைப் பெற்ற ஆட்சியர் கந்தசாமி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே பெற்றோரை இழந்து தம்பி, தங்கைகளுடன் வறுமையில் வாடிய இளம்பெண்ணுக்கு அரசு வேலை வாங்கித் தந்து தம்பி தங்கைகளை படிக்கவும் உதவி செய்தவர் ஆட்சியர் கந்தசாமி என்பது குறிப்பிடத்தக்கது.