தமிழகம்

புயல் தாக்குதலில் பேரழிவை சந்தித்துள்ள தென்னை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு: மன்னார்குடி எஸ்.ரெங்கநாதன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

கஜா புயல் தாக்குதலில் பேரழிவை சந்தித்துள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக கணக்கிட்டு வழங்க தென்னை விவசாயிகளின் கூட்டத்தை கூட்டி கருத்தறிய வேண்டும் என காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் மன்னார்குடி எஸ்.ரெங்கநாதன்  வலியுறுத்தி உள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் தலையாமங்கலம், வல்லூர், கூப்பாச்சிக் கோட்டை, பரவாக்கோட்டை, உள்ளிக்கோட்டை பகுதிகளில் புயல் தாக்குதலால் வேரோடு சாய்ந்து அழிந்துபோன தென்னை மரங்களை நேற்று பார்வையிட்டு, விவசாயிகளுக்கு ஆறுதல் கூறிய அவர், பின்னர் ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியதாவது:

தென்னை விவசாயிகளின் நிலை மிகவும் கவலை அளிக்கிறது. அனைத்து கிராமங்களிலும் நல்ல காய்ப்பில் இருந்த தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்துவிட்டன. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு தென்னையை காப்பீடு செய்வது குறித்த விழிப்புணர்வு இல்லை. அரசு சார்பிலும்விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை.

இந்த புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலத்தை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு வருவதற்கே அதிக செலவாகும். அதில், மீண்டும் தென்னையை பயிரிட்டு, வளர்த்தெடுத்து, காய்ப்புக்குக் கொண்டுவர 8 ஆண்டுகள் ஆகும்.

எனவே, அரசு இதை கருத்தில்கொண்டு,  உடனடியாக கணக்கெடுப்புப் பணிகளை தொடங்க வேண்டும்.

மேலும், நிலத்தை பண்படுத்தவும், இழந்த தென்னைகளுக்கு மறு உற்பத்தி செய்யவும் உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும். காப்பீடு திட்டத்தின் மூலம் உரிய இழப்பீட்டை பெற்றுத் தருவது குறித்தும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதற்கு புயல் பாதித்த மாவட்டங்களில் மாவட்ட வாரியாக தென்னை விவசாயிகளின் கூட்டத்தைக் கூட்டி கருத்தறிய வேண்டும். புயல் பாதித்த மாவட்டங்களைப் பார்வையிடுவதற்கும், சேத மதிப்பை கணக்கெடுப்பதற்கும் மத்திய அரசு உடனடியாக குழுவை அனுப்ப வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT