தமிழகம்

நீதி தாமதிக்கப்படாமல் கிடைக்க செய்வோம்: உயர் நீதிமன்ற புதிய நீதிபதி பேச்சு

செய்திப்பிரிவு

தாமதிக்கப்பட்ட நீதி என்ற நிலையை தவிர்க்க வழக்கறிஞர்களும் உதவ வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுள்ள புதிய நீதிபதி வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த வினீத் கோத்தாரி-யை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்ய குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தார்.

அதன்படி சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தலைமை நீதிபதி விஜயா கம்லேஷ் தஹிலரமானி பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

இந்நிகழ்ச்சியில், தற்போதைய நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சிறப்பு குழு தலைவரும், அரசு தலைமை வழக்கறிஞருமன விஜய் நாராயண், மத்திய அரசு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன், மத்திய மாநில அரசு வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நீதிபதி வினீத் கோத்தாரி பதவியேற்பின் மூலம் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்து, காலியிடங்களின் எண்ணிக்கை 14ஆக குறைகிறது.

நீதிபதி வினீத் கோத்தாரி தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி விஜயா கம்லேஷ் தஹிலரமானிக்கு அடுத்த இடத்தில் இரண்டாவது மூத்த நீதிபதியாக இருப்பார்.

விழாவில் நீதிபதி வினித் கோத்தாரி நிகழ்த்திய ஏற்புரை:

“சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. சென்னை உயர் நீதிமன்றம், 3 தலைமை நீதிபதிகளையும், 20 நீதிபதிகளையும் உச்ச நீதிமன்றத்துக்கு தந்திருக்கிறது.

தாமதிக்கப்பட்ட நீதி என்ற நிலையை தவிர்க்க வேண்டும். வழக்குகளை விரைந்து முடிக்க வழக்கறிஞர்கள் உதவுவார்கள் என நம்புகிறேன்.”

SCROLL FOR NEXT