இசையமைப்பாளர் இளையராஜா நேற்று வீடியோ பதிவு மூலம் அவர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
இசைக்கலைஞர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பு. என்னுடைய முன் அனுமதி பெறாமல், என் பாடல்களை பாட விரும்புகிற இசைக் கலைஞர்கள் முன் அனுமதி பெற்று பாடுவதே முறையாகும். இல்லையென்றால், சட்டப்படி குற்றமாகும். அப்படிச் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுவரை ஐபிஆர்எஸ் அமைப்பில் நான் உறுப்பினராக இருந்தேன். இப்போது உறுப்பினராக இல்லாத காரணத்தால், இதுவரை என் சார்பாக வசூலித்து கொண்டிருந்த ராயல்டி தொகையை, இனி தென்னிந்திய திரைப்பட இசை கலைஞர்கள் சங்கம் வசூலிக்கும். இதற்கான உரிமையை அச்சங்கத்துக்கு வழங்கியிருக்கிறேன்.
யாரும் பாடுவதற்கு நான் இடைஞ்சல் செய்யவில்லை என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். பணம் வாங்கி கொண்டுதான் நீங்களும் இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறீர்கள். என் பாடலுக்கு பாடுபவர்கள் பணம் வாங்குகிறார்கள். அதில் எனக்கு பங்கு இல்லையா, பாடலே என்னுடையது என்கிறபோது பங்கு எப்படி இல்லாமல் போகும். பங்கு என்பது சிறிய தொகைதான். அதைக்கூட பெயருக்குத்தான் கேட்கிறேன்.
நாளைய தலைமுறைக்கு இது சரியான நடவடிக்கையாக இருக்கும். முன்னோடி நடவடிக்கையாகவும் இருக்கும். இவ்வாறு இளையராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இசைக்கலைஞர்கள் சங்கம் தெரிவித்திருப்பதாவது: பாடல்களின் காப்புரிமையை காக்கும் பணியோடு, அதனை நெறிப்படுத்தும் பணியையும் இசைக் கலைஞர்கள் சங்கத்துக்கு தந்து, அதில் வரும் தொகையை இசைக் கலைஞர்கள் பெறுவதும் இதுதான் முதல் முறை. இதன் வழியே கிடைக்கும் நிதி முழுவதும் உறுப்பினர்களின் சேமநல நிதிக்கும் உறுப்பினர்களின் கருணைத் தொகைக்கும் மட்டுமே சென்றடையும்.
இளையராஜா இந்த சேவையை அளித்ததில் இசைக்கலைஞர்கள் சங்கத்துக்கு மகிழ்ச்சி எனக் கூறப்பட்டுள்ளது.