ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணை தவறானது என கூறும் அதிகாரம், தேசிய பசுமை தீர்ப்பாய குழுவுக்கு கிடையாது என உயர் நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமன் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழுவின் தலைவர் தருண் அகர்வால் மீது காசியாபாத் பி.எப். முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டு உண்டு. முக்கியமான ஒரு வழக்கை விசாரிக்க பிரச்சினைகளில் சிக்காத ஒரு நீதிபதியை ஏன் நியமிக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது?
இந்த வழக்கில் எதிர் மனு தாரர்கள் 4 பேர் உள்ள நிலையில், இவர்களுக்கு இந்த வழக்கு தொடர்பாக ஸ்டெர்லைட் ஆலை தாக்கல் செய்த ஆவணங்கள் மறுக்கப்பட்டுள்ளன. இதனால், இவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் தீர்ப்பாயத்தில் எதிர்வாதம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
தமிழக அரசின் அரசாணை தவறானது என்று கூறும் அதிகாரம் தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழுவுக்கு இல்லை. குழு அறிக்கை வெளியாகியுள்ள பின்னணியில்தான், இந்த போராட் டத்துக்கு தலைமை வகித்தவர்கள் பற்றிய அவதூறான வீடியோவும் வெளியாகியது. இதன்மூலம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தை குலைக்க முடியாது. தமிழக அமைச்சரவையை உடனே கூட்டி ஸ்டெர்லைட் ஆலையை மூட தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.