மின் கட்டணம் செலுத்துவதில், வங்கி காசோலை மற்றும் பணம் செலுத்த விதிக்கப்படும் கெடுபிடிகளால், மின் நுகர்வோருக்கு, பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. எனவே, கட்டண வசூல் முறைகளை எளிதாக்க வேண்டுமென்று நுகர்வோர் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
மின் வாரிய பிரிவு அலுவலகங்கள், தபால் அலுவலகங்கள், குறிப்பிட்ட சில வங்கிகள், குறிப்பிட்ட வங்கிகளின் ஏ.டி.எம். மையங்கள், குறிப்பிட்ட செல்போன் நிறுவனத்தின் மூலம் மொபைல் பேங்கிங், கண்காணிப்பு மேற்பார்வைப் பொறியாளர் அலுவலக வசூல் மையம் போன்ற வசதிகள் மூலம் மின் நுகர்வோரிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதில், மின் கட்டணம் ரூ.2 ஆயிரத்துக்கு மேல் இருந்தால் அவர்களிடம் வரைவோலை அல்லது காசோலையாக கட்டணம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வரைவோலை எடுக்க வங்கிகளுக்கு சேவைக் கட்டணம் செலுத்த வேண்டுமென்பதால் பலர் காசோலையாக செலுத்துகின்றனர்.
இந்தக் காசோலைகள் எதிர்பாராத விதமாக பணமின்றியோ அல்லது எழுத்துப் பிழை உள்ளிட்ட காரணங்களுக்காகவோ, வங்கிகளிலிருந்து திரும்பினால், சம்பந்தப்பட்ட நுகர்வோரிடம் பல்வேறு கூடுதல் கட்டணங்களாக ரூ.400 வரை வசூலிக்கப்படுகிறது. இக்கட்டணத்தை செலுத்திய பின் நுகர்வோருக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டாலும், அவர் மீண்டும் காசோலையாக கட்டணம் செலுத்த சுமார் 6 மாதங்கள் முதல் ஓர் ஆண்டு வரை அனுமதி வழங்கப்படுவதில்லை. இதனால், நுகர்வோர் கூடுதலாக செலவு செய்து ஒவ்வொரு முறையும் வரைவோலை எடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் அவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து, மின் துறை ஊழியர்களிடம் கேட்டபோது, “மின் பிரிவு அலுவலகங்களில் கட்டணம் வசூலிக்கும் பிரிவில் ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. மேலும் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளில் கள்ளநோட்டு உள்ளதா என்பதை சோதிக்கும் கருவிகள் இல்லை. வங்கிகள், செல்போன் நிறுவனங்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களைப் போல், பணம் எண்ணும் கருவியும் இல்லை. இதனால், பெருந்தொகையாக பணம் வாங்குவதில்லை” என்றனர்.
இதுகுறித்து பாரதிய மின் தொழிலாளர் சம்மேளனத்தின் சென்னை தெற்கு வட்டச் செயலாளர் ஆர்.மணியிடம் கேட்டபோது, “வங்கியிலிருந்து காசோலை திரும்பி வரும் நுகர்வோருக்கு ஒரு முறை கூடுதல் வாய்ப்பு தந்து, காசோலை பெறும் வசதி அளிக்கலாம். அதேநேரம் தொடர்ந்து, அவர்கள் காசோலை திரும்பி வந்தால் அடுத்தடுத்த முறைக்கு அபராத மற்றும் சேவைக் கட்டணத்தை இன்னும் அதிகரிக்கலாம். இதன் மூலம் தவறுகள் குறைவதுடன், நுகர்வோர் நலனும் பாதுகாக்கப்படும். வசூல் மையங்களில் நவீன கருவிகள் வைப்பது குறித்து மின் வாரியம் முடிவெடுத்தால் நல்லதுதான்” என்றார்.
மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, “பணத்தை வங்கிகளுக்கு கொண்டு செல்வதில் பாதுகாப்பில்லை. மேலும் அதிக தொகை வரும்போது, அவை ஒரு சில பணியாளர்களால் கையாடல் செய்யப்படவோ அல்லது அதனை தவறாகப் பயன்படுத்தவோ வாய்ப்பு ஏற்படும் என்பதால் காசோலை மற்றும் வரைவோலை கேட்கிறோம்” என்றனர்.
இதற்கான தீர்வு குறித்து, தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் அமைப்பு தலைவர் சடகோபன் கூறியதாவது:
ரூ.2 ஆயிரம் வரைதான் பணமாக வாங்குவோம் என்ற விதி பல ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்டது. தற்போது ரூபாயின் மதிப்பு பல மடங்கு மாறிவிட்டது. மின் கட்டணம் உயர்ந்துள்ளதுடன், நுகர்வோரின் மின் பயன்பாடும் அதிகரித்துவிட்டது. எனவே, காலத்துக்கு ஏற்ப, மின் வாரியம் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.
பணம் எண்ணும் கருவியும், கள்ள ரூபாய் நோட்டுகளை கண்டறியும் கருவியும், மிகக் குறைந்த தொகைக்கு கிடைக்கும் நிலையில், மின் வாரியம் இந்த கருவிகளை வாங்க முன்வர வேண்டும். இக்கருவிகளை வாங்கினால், தற்போது ஒருவரிடம் பணம் வசூலிக்கும் நேரத்தில் 5 பேரிடம் வசூலிக்க முடியும்.
சில்லறை விற்பனைக் கடைகள் கூட, இந்த இயந்திரங்களை வைத்திருக்கும்போது, பல கோடி வசூலிக்கும் மின் வாரியம், தங்கள் நடைமுறைகளை நவீன தொழில்நுட்பத்துக்கு மாற்ற வேண்டும். மேலும் பணத்தை வங்கிக்கு கொண்டு செல்வதில் சிக்கல் இருந்தால், தனியார் நிறுவனங்கள் போல், வங்கிகளே நேரில் வந்து பணம் பெற்றுச் செல்லும் முறையை அமல்படுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.