தமிழகம்

சென்னையில் சோகம்; தீபாவளிக்கு வெடித்த பட்டாசால் முகத்தில் காயம்: சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

தீபாவளிக்குப் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு சிறுவர்கள் காயமடைந்தனர். இதில் ஒரு சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது சகோதரர்  சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை நெற்குன்றம் விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் ஆண்டியப்பன். இவருக்கு 9 வயதிலும், 7 வயதிலும் இரு மகன்கள். தீபாவளி நெருங்குவதை ஒட்டி ஆண்டியப்பன் வீட்டில் பட்டாசுகளை வாங்கி வைத்திருந்தார்.

தீபாவளிக்கு மூன்று நாட்களுக்கு முன் கடந்த நவம்பர் 3-ம் தேதி அன்று சகோதரர்கள் இருவரும் தங்கள் வீட்டின் முன் பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசு வெடித்ததில் ஆண்டியப்பனின் மூத்த மகன் ரகுராஜ் (9) முகத்தில் பலத்த தீக்காயம்  ஏற்பட்டது.

இந்த விபத்தில் ரகுராஜின் 7 வயது தம்பிக்கும் காயம் ஏற்பட்டது. முகத்தில் 28 சதவிகித தீக்காயத்தால் பாதிக்கப்பட்ட ரகுராஜும், 9 சதவிகித தீக்காயத்துடன் ரகுராஜின் தம்பியும் சிகிச்சைக்காக கேஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ரகுராஜ்  நேற்றிரவு மரணமடைந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக மார்ச்சுவரிக்கு அனுப்பப்பட்டது. அவரது 7 வயது தம்பிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தீபாவளிப் பண்டிகையை சந்தோஷமாகக் கொண்டாட வேண்டிய சகோதரர்கள் அஜாக்கிரதையாக பட்டாசுகளைக் கையாண்டதால் தற்போது குடும்பமே சோகத்தில் மூழ்கிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆபத்தான பட்டாசுகளை எளிதில் தீப்பற்றக்கூடிய துணிகளை அணிந்து வெடிக்கக்கூடாது, பெரியவர்கள் துணையுடன்தான் வெடிக்கவேண்டும் என்ற எச்சரிக்கை பலமுறை எச்சரிக்கையாக விடுக்கப்பட்டாலும் அதைப் பின்பற்றாததன் விளைவே இதுபோன்ற விபத்துகள் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT