மடிப்பாக்கத்தில் போலி ஏடிஎம் கார்டுகளை வைத்து ஏடிஎம் எந்திரங்களில் பணம் எடுக்க முயன்ற 2 ருமேனிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். வாடிக்கையாளர் தகவலைத் கைப்பற்றி பணம் திருடும் சைபர் குற்றவாளிகளா? என போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.
சென்னையை அடுத்த மடிப்பாக்கம் சதாசிவம் நகரில் உள்ள வங்கி ஏ.டி.எம்.கள் முன் 2 வெளிநாட்டு இளைஞர்கள் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி கொண்டு இருந்தனர். ஏடிஎம் மையத்திற்குள் போவதும் வருவதுமாக இருந்த அவர்கள்மீது சந்தேகமடைந்த பொதுமக்கள் இது பற்றி மடிப்பாக்கம் போலீஸாருக்கு தகவல் தந்தனர்.
மடிப்பாக்கம் போலீஸார் விரைந்து வந்து 2 இளைஞர்களையும் பிடித்து விசாராணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாகவே பேசியதால் காவல் நிலையத்திற்கு அவர்களை அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும் ருமேனியா நாட்டை சேர்ந்த நிகோலாய் கியம்லிசி(35), செர்சி ஜார்ஜ்(36) என தெரியவந்தது.
2 பேரும் கடந்த 2 நாட்களுக்கு முன்தான் ருமேனியாவிலிருந்து சென்னை வந்துள்ளனர். அவர்கள் எதற்காக இங்கு வந்தார்கள் என விசாரணை நடத்திய போலீஸார் அவர்களிடம் சோதனையிட்டபோது அவர்கள் இருவரிடமும் 20-க்கும் மேற்பட்ட வங்கி ஏ.டி.எம் கார்டுகள் இருந்தது தெரியவந்தது.
அவைகள் மூலம் சென்னையில் உள்ள ஏ.டி.எம்.களில் ஏதாவது நூதன முறையில் பணம் எடுக்க திட்டமிட்டு இருந்தார்களா? அவைகள் உண்மையான கார்டுகளா? அல்லது போலி கார்டுகளா? என போலீஸார் விசாரணை நடத்தினர். இருவரும் துரைப்பாக்கத்தில் தங்கியிருப்பதாக கூறியதால் அங்கு விசாரிக்க போலீஸார் அழைத்து சென்றனர்.
2 பேரிடமும் மொழி பிரச்சனையால் போலீஸாரால் விசாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதிகமான ஏ.டி.எம் கார்டுகள் இருப்பதால் இவர்கள் சைபர் பிரிவு குற்றவாளிகளாக இருக்கலாம், வாடிக்கையாளர்கள் தகவல்களை திருடி அதன்மூலம் போலி கார்டுகளை தயாரிக்கும் கும்பலைச்சேர்ந்தவர்களாக இருக்கலாம்.
அதன்மூலம் தமிழகத்தில் எங்கோ ஒரு மூலையில் ஐரோப்பிய வாடிக்கையாளர்களின் பணத்தை திருட வந்த கூட்டமாக இருக்கலாம் என்பதால் முதல் நடவடிக்கையாக போலி கார்டுகளை வைத்திருந்ததை ஆதாரமாக வைத்து ருமேனிய தூதரகத்திற்கு தகவல் அளித்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கையை போலீஸார் எடுத்துள்ளனர்..
மேல் விசாரணையை மத்திய குற்றப்பிரிவு சைபர் பிரிவு போலீசார் விசாரிக்க அவர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்து உள்ளனர்.