'கஜா' புயலால் அச்சப்படும் வகையிலான பாதிப்புகள் நிகழவில்லை என வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை எழிலகத்தில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
"புயல் பாதிப்புகளில் இருந்து விரைவில் சகஜ நிலையைக் கொண்டு வருவதற்காக மாவட்ட நிர்வாகங்களுக்கு மாநிலக் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து வருவாய்த் துறை ஆணையர் சத்யகோபால் ஆலோசனைகளை வழங்குகிறார். நாங்களும் முதல்வரின் உத்தரவின்படி செயல்பட்டு வருகிறோம்.
கடலூர், புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் சுவர் விழுந்தது, மின்கசிவு, மரம் விழுந்த பாதிப்புகள் குறித்து எங்களுக்குத் தகவல்கள் வருகின்றன. அவை குறித்து விசாரணை செய்து முதல்வர் கவனத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறோம். உறுதி செய்து பாதிப்பு விவரங்களை முதல்வர் வெளியிடுவார்.
விமானம், ரயில் போக்குவரத்து ஆகியவை குறித்து வானிலை மையம் அறிவுறுத்தலின்படி மத்திய அரசு முடிவெடுக்கும். சாலை போக்குவரத்தை பொறுத்தவரை நேற்று மாலை 6 மணிமுதல் காலை 6 மணி வரைதான் அறிவிப்பு கொடுத்திருந்தோம். போக்குவரத்து சீர்செய்யப்படுவதற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
இறப்புகள் குறித்த தகவல்களை உறுதி ஆன பிறகு முதல்வர் வெளியிடுவார்.
புயலினால் அதிகபட்சமாக மணிக்கு 111 கி.மீ. வேகம் காற்று பதிவாகியுள்ளது. மரங்கள் அகற்றும் பணிகள், மின்கம்பங்கள், மின்மாற்றிகள் சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து துறை அதிகாரிகள் அப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கரையில் நின்ற படகுகள் ஒன்றோடொன்று மோதி சேதம் அடைந்துள்ளன. மீன்வளத்துறையும் வருவாய்த் துறையும் இணைந்து அதுகுறித்து கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன.
அச்சப்படும் வகையிலான பாதிப்புகள் நிகழவில்லை என்பது மகிழ்ச்சியான செய்தி. உயிரிழப்பே இல்லாமல் எதிர்கொள்ள வேண்டும் என முயற்சிகள் மேற்கொண்டோம். மக்கள் 100 சதவீதம் ஒத்துழைப்பு அளித்தனர். மக்களுக்கு நன்றி. தவிர்க்க முடியாத சூழலில் இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
6 மாவட்டங்களில் உள்ள 471 முகாம்களில் 82 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதன் விவரம்:
கடலூர் மாவட்டத்தில் 109 முகாம்களில் 3 ஆயிரத்து 892 குடும்பங்கள், நாகை மாவட்டத்தில் 102 முகாம்களில் 11 ஆயிரத்து 306 குடும்பங்கள், ராமநாதபுரம் மாவட்டத்தில் 17 முகாம்களில் 510 குடும்பங்கள், தஞ்சை மாவட்டத்தில் 58 முகாம்களில் ஆயிரத்து 871 குடும்பங்கள், புதுக்கோட்டை மாவட்டத்தில் 25 முகாம்களில் 658 குடும்பங்கள், திருவாரூர் மாவட்டத்தில் 160 முகாம்களில் 4 ஆயிரத்து 613 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மிக விரைவில் சகஜ நிலை திரும்பும்.
சேதமடைந்துள்ள பயிர்களுக்கு பேரிடர் நிவாரண நிதி, காப்பீடு மூலம் நிவாரணம் வழங்கப்படும்".
இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.