சென்னை சாலிகிராமம் ஏகாம் பரம் தெருவைச் சேர்ந்தவர் ராமதாஸ் (60). குவைத்தில் 25 ஆண்டுகளாக உள்ள ராமதாஸ் அங்கு தனியார் நிறுவனத்தில் சிஇஓ ஆக உள்ளார். இவர் சித்தர் வழிபாடு, தியானத் தில் ஈடுபாடு உள்ளவர்.
இவருக்கு, குவைத்தில் வேலை பார்த்த இளையான்குடியைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. ராமதாஸை பற்றி அறிந்துகொண்ட அப்துல் அஜீஸ், சிவகங்கை அண்ணாமலை நகரைச் சேர்ந்த முனியாண்டியின் மகன் ரவி என்பவரை சாமியார் என அறிமுகப்படுத்தி உள்ளார்.
சாமியார் ரவி (46), ராமதாஸிடம் ஆசிரமம் கட்ட வேண்டும். நிதியுதவி செய்யுங்கள் எனக் கேட்டுள்ளார். அதை நம்பிய ராமதாஸ், 2015-ம் ஆண்டில் ரூ.1.10 கோடி அனுப்பி உள்ளார். இதேபோல, பல தவணை களில் ராமதாஸிடம் இருந்து ரூ.4.65 கோடி பணத்தை ரவி பெற்றுள்ளார். ஆனால் ராமதாஸ் பெயரில் நிலம் வாங்காமல், ஆசிரமம் கட்டாமல் ஏமாற்றி உள்ளார்.
இதுகுறித்து கேட்ட ராமதாஸுக்கு அவர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, சிவகங்கை எஸ்பி டி.ஜெயச்சந்திரனிடம் ராமதாஸ் புகார் அளித்தார். அவரது உத்தரவில் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி பாண்டிசெல்வம் விசாரித் தார். இதில் சாமியார் என ஏமாற்றிய ரவி, அவரது மனைவி புவனேஸ்வரி, அவரது உறவினர் மோதீஸ்வரன், அப்துல் அஜீஸ், சென்னை தேவா என்ற பொன்னியப்பன், பட்டுக் கோட்டை ராஜமாணிக்கம் ஆகியோ ருக்கும் தொடர்பிருப்பது தெரிந்தது. இதில் 6 பேர் மீது வழக்குபதிந்து போலிச் சாமியார் ரவியை கைது செய்தனர்.
ஏற்கெனவே, திருச்சியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரிடம், ரவி ரூ. 40 லட்சம் மோசடி செய்ததும் தெரியவந்தது.