உடல் உறுப்பு தானத்தில் சிறந்து விளங்கியதற்காக தொடர்ந்து 4-வது முறையாக தமிழகத்துக்கு மத்திய அரசு விருது வழங்கியது.
மத்திய சுகாதாரத் துறை சார்பில் 9-வது இந்திய உடல் உறுப்பு தான தின விழா டெல்லியில் நேற்று நடந்தது. இந்த விழாவில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர்கள் அஷ்வின் குமார் சௌபே மற்றும் அனுபிரியா பட்டேல் ஆகியோர் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம் பெற்றமைக்கான விருதினை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வழங்கினர்.
அப்போது மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் பிரீத்தி சுடான், தமிழக சுகாதாரத் துறை கூடுதல் செயலாளர் நாகராஜன், நோட்டோ இயக்குநர் வசந்தி ரமேஷ், தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் உறுப்பினர் செயலர் காந்திமதி ஆகியோர் உடன் இருந்தனர்.
விழாவில் அமைச்சர் சி.விஜய பாஸ்கர் பேசியதாவது:
தமிழக அரசு உடல் உறுப்பு தானத்தில் சிறந்து விளங்கியதற் காக தொடர்ந்து நான்காவது முறை யாக இவ்விருதினை பெறுவதில் பெருமையடைகிறேன். தமிழகத் தில் 2014-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி தமிழ்நாடு உறுப்பு தான ஆணையம் (டிரான்ஸ்டான் - TRANSTAN) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
இதுவரை தமிழகத்தில் 1,198 கொடையாளர்களிடமிருந்து 6,886 உறுப்புகள் தானமாக பெறப்பட் டுள்ளன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, ஏழை, எளிய மக்களுக்கு இலவச மாக செய்யப்படுகிறது.
மருத்துவ காப்பீட்டுத் திட்டம்
இந்த சிகிச்சைகளுக்கு தமிழ கத்தில் மட்டும்தான் அதிகபட்ச மாக ரூ.35 லட்சம் வரை முதல மைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தமிழகத்தின் இரண்டாம் நிலை நகரங்களுக்கும் விரிவுபடுத்தப் பட்டு வருகிறது.
தமிழகம், உடல் உறுப்பு தானத்தில் தலைசிறந்து முன்னோடி மாநிலமாகவும், மற்ற மாநிலங்கள் தமிழகத்தை பின்பற்றக் கூடிய வகையிலும் செயல்படுகிறது.
2015-ம் ஆண்டு மின்சார விபத் தினால் திண்டுக்கல்லைச் சேர்ந்த நாராயணசாமி என்ற இளைஞர் தனது இரு கைகளையும் இழந்தார். அந்த இளைஞருக்கு கடந்த பிப்ர வரி 7-ம் தேதி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் குடும்பத்தினர் தானமாக கொடுத்த கைகளைப் பெற்று, 13 மணி நேரம் கைகள் மாற்று அறுவை சிகிச்சையை ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சைத் துறை மருத்துவக் குழுவினர் வெற்றிகரமாக செய்து சாதனை படைத்துள்ளனர். இது இந்தியாவி லேயே அரசு மருத்துவமனையில் முதன்முறை யாக செய்யப்பட்டது.
உலக சாதனை
தமிழ்நாடு உறுப்பு தான ஆணை யம் சார்பில் சென்னையில் கடந்த அக்டோபர் 24-ம் தேதி உடல் உறுப்பு தான விழிப்புணர்வை ஏற்படுத்து வதற்காக 4,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஒரே இடத்தில் 80 நிமிட தொடர் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சி கின்னஸ் உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 16-ம் தேதி சென்னை பெசன்ட் நகரில் 5,000-க் கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட உடல் உறுப்பு தானம் குறித்த மாபெரும் விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதுபோன்ற செயல்பாடுகளால் உடல் உறுப்பு தான விழிப் புணர்வை ஏற்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. இதன்மூலம் உடல் உறுப்பு தானத்தை மக்கள் இயக்கமாகவே தமிழகம் மாற்றி வருகிறது.
இவ்வாறு சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.