தமிழகம்

ரஜினியின் 2.0 படத்தை இணையதளத்தில் பதிவேற்ற உயர் நீதிமன்றம் தடை

செய்திப்பிரிவு

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தை முறைகேடாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இயக்குநர் சங்கர் இயக்கத்தில் ஏற்கெனவே ரஜினி நடித்து எந்திரன் படம் வெளியானது. தற்போது அதன் இரண்டாவது பாகமாக 2.0 என பல நூறு கோடி ரூபாய் பொருட்செலவில் 4 ஆண்டுகாலம் மிகப்பெரும் கிராபிக்ஸ் காட்சிகளுடன் தயாரிக்கப்பட்டு வருகிறது.

ரஜினியின் 2.0 திரைப்படம் வரும் 29-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் கூறுகையில் “மிகப் பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள 2.0 படத்தை முறைகேடாக இணையதளத்தில் வெளியிடப்பட்டால் மிக பெரிய அளவில் தங்களுக்கு நஷ்டம் ஏற்படும் எனவே முறைகேடாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வெளியிட கூடாது என உத்தரவிட வேண்டும்” என்று கூறியுள்ளனர்.

இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை  விசாரித்த நீதிபதி சுந்தர், எந்திரன் 2.0 படத்தை இணையதளத்தில் வெளியிட 3000 இணையதளங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT