வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி கரையை கடந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்னையில் விடிய விடிய மழை பெய்தது. அதனால் 62 இடங்களில் மழைநீர் தேங்கியது.
வங்கக் கடலில் நிலவிய வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று தமிழக கரையை நெருங்கி நிலப்பகுதிக்கு சென்றது. அதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை முதலே சாரல் மழை பெய்து வந்தது. கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்த நிலையில், சென்னையில் நேற்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்திருந்தது.
9.4 செ.மீ மழை
நேற்று முன்தினம் காலை 8.30 மணியில் இருந்து இரவு 8.30 மணிவரை சென்னை நுங்கம்பாக்கத்தில் 2.7 செமீ மழை மட்டுமே பதிவாகி இருந்தது. அதன் பின்னர் மழைப் பொழிவு அதிகரித்தது. இரவு முழுவதும் விடிய, விடிய மழை பெய்தது. நேற்று காலை 8.30 மணிக்கு எடுக்கப்பட்ட மழை அளவின்படி 24 மணி நேரத்தில் 9.4 செமீ மழை பதிவாகி இருந்தது.
மழை காரணமாக சென்னை மாநகரப் பகுதியில் 62 இடங் களில் மழை நீர் தேங்கியதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தன. இதையடுத்து அப்பகுதிகளில் நீரை வெளியேற் றும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டது. 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் வெளியேற்றப்பட்டது. இந்த மழையில் 16 மரங்கள் விழுந்தன. அவை அனைத்தையும் மாநகராட்சி நிர்வாகம் அகற்றியுள்ளது. மேலும் ஸ்டான்லி மருத்துவமனை பின்புறம் உள்ள சுரங்கப் பாதை, வில்லிவாக்கம் சுரங்கப் பாதை, ஹாரிங்டன் சாலை சுரங்கப் பாதை உள்ளிட்ட 6 சுரங்க பாதைகளில் மழை நீர் தேங்கியது. மழைநீர் அகற்றப்பட்டதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.