தமிழக போலீஸாருக்கு மறக்க முடியாத தினம் 1980-ம் ஆண்டு, ஆகஸ்ட் 6-ம் தேதி.
திருப்பத்தூர் காவல் ஆய்வாளர் பழனிச்சாமி உள்ளிட்ட காவலர்கள் 3 பேர் காரில் சென்றபோது, நக்ஸலைட்களால் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டனர். நக்ஸலைட்களால் உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திருப்பத்தூரில் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடந்து வருகிறது.
தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் பகுதிகளில் 1978-ம் ஆண்டு நக்ஸலைட் ஆதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மோலோங்கத் தொடங்கிய காலகட்டம் அது. முதல் பலியாக 1978-ம் ஆண்டு திருப்பத்தூர் அருகே உள்ள மத்தூர் பகுதியைச் சேர்ந்த அப்பாசாமி ரெட்டியார் கொல்லப்பட்டார். அந்த காலக் கட்டத்தில் தமிழ்வாணன் தலைமையில் சிவலிங்கம் என்ற அன்பு, இவரது உறவினர் மகாலிங்கம், நொண்டி பழனி உள்ளிட்டோர் அழித்தொழிப்பு கொள்கைக்கு உயிரூட்டிக்கொண்டிருந்தனர்.
தமிழக போலீஸாருக்கு 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி அதிகாலை அதிர்ச்சி காத்திருந்தது. திருப்பத்தூர் அருகே ஏலகிரி கிராமத்தில் சுற்றித்திரிந்த 4 பேரை ஆய்வாளர் பழனிச்சாமி பிடித்தார். திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் வைத்து இவர்களிடம் விசாரித்தபோது, சிக்கியவர்களில் ஒருவர் நக்ஸலைட் முக்கியப் புள்ளி சிவலிங்கம் என்பதை உறுதி செய்தார். அப்போதைய வேலூர் சரக டிஐஜி வால்டர் தேவாரத்திடம் உத்தரவுகளைப் பெற்றுக்கொண்டு நக்ஸலைட்களை ஒரு அம்பாஸிடர் காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்.
அந்த கார் புறப்பட்ட சிறிது நேரத்தில் சுக்கு நூறாக வெடித்துச் சிதறியது. காரில் இருந்த ஆய்வாளர் பழனிச்சாமி, காவலர்கள் முருகேசன், ஏசுதாஸ் ஆகியோருடன் நக்ஸலைட்கள் இருவரும் இறந்தனர். மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வீசிவிட்டு சிவலிங்கம் மட்டும் தப்பினார்.
வேலூரில் நடந்த ஆய்வாளர் பழனிச்சாமியின் இறுதிச் சடங்கில் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் கலந்துகொண்டதுடன் சவ ஊர்வலத்தில் நடந்தே சென்றார். ‘‘நக்ஸலைட் வேட்டைக்கு தலைமை ஏற்று நடத்திய வால்டர் தேவாரத்துக்கு எம்ஜிஆரிடம் இருந்து கிடைத்த உத்தரவு இதுதான்.
‘தமிழகத்தில் நக்ஸலைட் இயக்கமே இருக்கக்கூடாது.’
இதை சபதமாக ஏற்ற வால்டர் தேவாரம், இறுதிச் சடங்கில் ஓடி விளையாடிக் கொண்டிருந்த பழனிச்சாமியின் 5 வயது மகள் அஜந்தாவை தூக்கி வாரி அணைத் துக்கொண்டார். ‘ஆபரேஷன் அஜந்தா’ என்ற பெயரில் நக்ஸலைட் ஒழிப்பு வேட்டையை தொடங்கினார். போலீஸாரின் அதிரடி வேட்டையால் நக்ஸலைட்களின் ஆதிக்கம் இந்த பகுதியில் மறைந்தது.
பழனிச்சாமி உள்ளிட்ட 3 காவலர்களை கொலை செய்த சிவலிங்கத்தை, 2009-ம் ஆண்டு திருவள்ளூர் அருகே கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
அன்றுடன் இந்த ‘அஜந்தா ஆபரேஷன்’ முடிவுக்கு வந்தது.