பேனர் கலாச்சாரம் தொடர்பாக நெட்டிசன் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்திருக்கிறார். இதற்கு திமுகவினர் பலரும் வரவேற்பு தெரிவித்திருக்கின்றனர்.
கட்சியினர் வைக்கும் பேனர் விவகாரத்தில், இதுபோன்ற தவறு மீண்டும் நடக்காது என உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிபட தெரிவித்திருக்கிறார்.
அரசியல் தலைவர்கள் ஒரு நிகழ்ச்சிக்குச் செல்லும் போது பேனர்கள், கட்-அவுட்கள் வைப்பது அனைவரும் தெரிந்ததே. அவை சமீபகாலமாக சாலையோரம் நடக்கும் பொதுமக்களுக்கு இடைஞ்சலாக வைத்து வருகிறார்கள்.
சென்னை வானகரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினை வரவேற்று சாலை நெடுகிலும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் “இளவரசர் வருகிறார்.. எங்களின் இளவரசரே” என்றெல்லாம் விதவிதமான வாசகங்களுடன் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
இதை சுட்டிக் காட்டிய நெட்டிசன் ஒருவர் சில பேனர்களைப் பகிர்ந்து அத்துடன், "எதிர்க்கட்சி 100 பேனர் வைக்கிறார்கள் என்று ஆளும்கட்சியிடம் புகார் கொடுத்தால் அவர்கள் 1000 பேனர் வைப்பவர்களாக இருக்கிறார்கள். ஒரு சாதாரண பேனர் விதிமுறைகளை கூட மதிக்க தெரியாத ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியை கொண்டது தான் நமது தமிழகம்" என ட்வீட் செய்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் உதயநிதி ஸ்டாலின், “தவறு.. மீண்டும் நடக்காது!" என பதிலளித்திருக்கிறார். இப்பதிலுக்கு ட்விட்டரில் இருக்கும் திமுகவினர் பலரும் வரவேற்பு தெரிவித்திருக்கிறார்கள்.
மேலும், உதயநிதி ஸ்டாலின் தன்னை சுட்டிக்காட்டி சொல்லப்படும் குற்றச்சாட்டுக்கு மன்னிப்பு தெரிவிப்பது இது முதன் முறையல்ல. கடந்த செப்டம்பர் மாதம் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொதுக் குழு உறுப்பினர் கூட்டத்தின் போது , அங்கு வைக்கப்பட்டிருந்த பேனரில் உதயநிதியின் படம் இடம் பெற்றிருந்தது.
இதற்கு திமுக தொண்டர் ஒருவர் தனது ட்விட்டரில், "ஒரு திமுக தொண்டனாய் இதெல்லாம் எவ்வளவு அருவெறுப்பா இருக்கு தெரியுமா? உங்களுக்கு தோணலையா? முன்னணி தலைவர்கள் மேடைல உங்க போட்டோ இடம் பெற உங்க தகுதி என்ன?" என வினவியிருந்தார். அதற்கு உதயநிதி ஸ்டாலின், தவறு.. மீண்டும் நடக்காது! எனப் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.