தமிழகம்

ரவுடிகளுக்கு துணையாக காவல் அதிகாரிகள் இருக்கிறார்களா?, தமிழகத்தில் உள்ள ரவுடி கும்பல் எத்தனை?- அரசுக்கு நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகள்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் செயல்படும் ரவுடிகும்பல், பின்னனியில் உள்ள அதிகாரிகள், அரசியல்கட்சிகள் என 14 அடுக்கடுக்கான கேள்விகளுக்கு டிஜிபி, உள்துறை செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   

சென்னை அயனாவரத்தில் இரு ரவுடி கும்பலுக்கு இடையில் நடந்த மோதலில், ஜோசப் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி லோகேஷ் கும்பலைச் சேர்ந்தவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தன்னை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்ததை எதிர்த்து வேலு என்பவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் பாஸ்கரன் அடங்கிய அமர்வு, தமிழகத்தில் ரவுடி கும்பல்கள் தீவிரமாக இருப்பதாகவும், இக்கும்பல்கள் கொலை, கொள்ளை, கடத்தலில் ஈடுபடுவதால் பொதுமக்கள் பீதியில் இருப்பதாகவும் வேதனை தெரிவித்தது.

இந்த ரவுடி கும்பலையும், கூலிப்படையினரையும் ஒழித்து விட்டால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாது எனத் தெரிவித்த நீதிபதிகள், தமிழக டிஜிபியையும், மத்திய உள் துறை செயளாலரையும் எதிர்மனுதாரர்களாக சேர்த்து, பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளனர்.

1. தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் எத்தனை ரவுடி கும்பல் தீவிரமாக உள்ளது?

2. இக்கும்பல்கள் எத்தனை குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளன?

3. அப்பாவிகளின் சொத்துக்களை அபகரிக்க,  ரியல் எஸ்டேட் துறையினர் ரவுடி கும்பல்களை ஈடுபடுத்துகின்றனரா?

4. எந்தெந்த அரசியல் கட்சிகள் குற்றப்பின்னணி கொண்டவர்களை நிர்வாகிகளாக நியமித்துள்ளன?

5. காவல்துறையினரின் பிடியில் இருந்து இருந்து தப்பிப்பதற்காக ரவுடிகள் அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கின்றனரா?

6. ரவுடிகள் வெளி மாநிலங்களில் உள்ள சட்ட கல்லூரிகளில் இருந்து சட்ட பட்டங்களை வாங்குகிறார்களா?

7. காவல்துறை உயர் அதிகாரிகள் ரவுடிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார்களா?

8. ரவுடிகளுக்கு மத அமைப்புகள் பிரிவினைவாத அமைப்புகள் ஆதரவு உள்ளதா?

9. இந்த ரவுடி கும்பல்களுடன்  இளைஞர்கள் சேர்வதற்கு சமூக பொருளாதார பின்னணி பின்னணி ஏதும் உள்ளதா?

10. ரவுடிகளுடன் சேர்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் சிறார்களை சீர்திருத்த  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?

11. ரவுடி கும்பல்களுடன் சிறார்கள் சேர்வதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

12. ரவுடிகளை கட்டுப்படுத்த டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரி தலைமையில் ஏன் சிறப்புப்பிரிவு துவங்க கூடாது?

13. மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களைப் போல தமிழகத்தில் திட்டமிட்ட குற்ற நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தை தமிழக அரசு ஏன் கொண்டு வரக் கூடாது?

14. பிற மாநில ரவுடிகளும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதால் இதுபோன்ற சட்டத்தை மத்திய அரசும் ஏன் கொண்டு வரக்கூடாது?

என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி, வரும் 30-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக டிஜிபி க்கும், மத்திய உள்துறை செயலலருக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.     

SCROLL FOR NEXT