தமிழகம்

ஆவடி அருகே டெங்கு விழிப்புணர்வு முகாம்

செய்திப்பிரிவு

டெங்கு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்டம்,  ஆவடி அருகில் உள்ள கொல்லுமேடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று (நவம்பர் 20)  நடைபெற்றது.

டுவின்டெக் கல்வி அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர் அ. மகாலிங்கம் ஒருங்கிணைத்த இந்த விழிப்புணர்வு முகாமில்  வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் லாவண்யா கலந்துகொண்டார்.

கொசுக்கள் பெருகும் விதம், அதன் மூலம் நோய்கள் எவ்வாறு பரவுகிறது, வீட்டிலும் வெளியிலும் மேற்கொள்ள வேண்டிய டெங்கு தடுப்பு முறைகள், வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியதின் அவசியம் ஆகியவற்றை  வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் லாவண்யா பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் விளக்கிக் கூறினார். ஒரு நாளுக்கு மேல் காய்ச்சல் தொடர்ந்து இருந்தால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.

கொசு உற்பத்தியாகக் கூடிய இடங்களைக் கண்டறிந்து அவற்றை அழித்து டெங்கு தடுப்புப் பணிகள் ஆற்றி வரும் மருத்துவ களப்பணியாளர்களுக்கு ஒத்துழைப்புத் தந்து டெங்குவினை ஒழிக்க அனைவரும் முன்வர வேண்டும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.  கூட்டத்தில் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

SCROLL FOR NEXT