‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக, பெங்களூருவைச் சேர்ந்த 8 வயது சிறுவன் தன்னுடைய உண்டியல் சேமிப்பைக் கொடுத்தனுப்பிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 15) நள்ளிரவு வேதாரண்யம் அருகே கரையைக் கடந்த ‘கஜா’ புயலால், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட 7 தமிழக மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தப் புயலால் 63 பேர் மரணமடைந்ததாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏராளமான ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும், தென்னை, வாழை உள்ளிட்ட மரங்களும் லட்சக்கணக்கில் சேதமடைந்துள்ளன. ஓட்டு மற்றும் கூரை வீடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
ஏராளமான தன்னார்வலர்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்தப் புயல் பாதிப்பில் இருந்து மீள்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், இன்னும் பல கிராமங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகத் தன்னார்வத் தொண்டாற்றி வரும் சென்னையைச் சேர்ந்த ஏஞ்சலின் சோபியா என்ற பெண், பெங்களூருவில் வசித்து வரும் தன்னுடைய பால்ய சிநேகிதியிடம் நிவாரண உதவிகள் குறித்து செல்போனில் பேசியுள்ளார்.
அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த பெங்களூரு தோழியின் மகன் வேதிக் (8), தன்னுடைய உண்டியல் சேமிப்பை ‘கஜா’ நிவாரண நிதிக்காகத் தருவதாகக் கூறியுள்ளார். அந்த உண்டியலில் 763 ரூபாய் சேமிப்பாக இருந்துள்ளது. அதை உடனடியாக ஏஞ்சலின் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்தத் தகவலை முகநூலில் பகிர்ந்துள்ள ஏஞ்சலின் சோபியா, வேதிக்கின் புகைப்படத்தை அனுப்பி வைக்கும்படி கேட்டிருக்கிறார். ஆனால், விளம்பரமாக இருக்கும் என்று எண்ணி பெங்களூரு தோழி மறுத்துவிட, மற்ற சிறுவர்களுக்கு இது ஊக்கமாக இருக்கும் என்று அவரைச் சமாதானம் செய்து, வேதிக்கின் புகைப்படங்களை வாங்கி முகநூலில் பதிவிட்டிருக்கிறார்.
வேதிக் அனுப்பிவைத்த பணத்தில், அவரைப் போலவே இருக்கும் சின்னக் குழந்தைகளுக்கு பிஸ்கட், ரஸ்க் ஆகியவை வாங்கப்பட்டுள்ளதாக நெகிழ்ச்சியுடன் முகநூலில் குறிப்பிட்டுள்ளார் ஏஞ்சலின் சோபியா.