தமிழகம்

பொள்ளாச்சியில் சோகம்: மனைவி, மாமியாரின் கழுத்தை அறுத்துக் கொன்று கணவர் தற்கொலை

ஆர்.கிருஷ்ணகுமார்

பொள்ளாச்சியில் குடும்பப் பிரச்சினை காரணமாக மனைவி மற்றும் மாமியாரின் கழுத்தை அறுத்துக் கொன்று கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டூர் சாலை சிடிசி காலனியில்  வசித்து வந்தவர் சுமதி (42). இவர் தன் கணவர் பாபு என்பவரைப் பிரிந்து தாய் விசாலாட்சியுடன் 2 ஆண்டுகளாக வசித்து வந்தார். பாபுவுக்கும் விசாலாட்சிக்கும் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பாபு கட்டிடத் தொழிலாளி ஆவார். இவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் அடிக்கடி இருவருக்கும் இடையே தகராறு ஏற்ப்பட்டுள்ளது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சுமதியின் வீட்டுக்குள் சுவர் ஏறிக் குதித்து உள்ளே சென்ற பாபு, கதவை உடைத்து மாமியார் விசாலாட்சியை, மறைத்து வைத்திருந்த பிளேடால் கழுத்தை அறுத்துக் கொன்றார். மேலும், மனைவி சுமதியின் கழுத்தையும் அறுத்துக் கொன்ற பாபு,  துணி கயிற்றின் மூலம் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கிழக்கு காவல் நிலைய போலீஸார் சடலங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT