தமிழகம்

கஜா புயல் உதவி: ரூ.10 கோடி கொடுத்த கேரள முதல்வருக்கு கமல் ஹாசன் நன்றி

செய்திப்பிரிவு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டப் பகுதி மக்களுக்கு உதவ ரூ. 10 கோடி நிதியும், நிவாரணப் பொருட்களும் அளித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 16-ம் தேதி வீசிய கஜா புயலால் திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, நாகை மாவட்டங்கள் லட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். இதுவரை 60 பேர்வரை உயிரிழந்துள்ளனர். 3.50 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

இந்நிலையில், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அரசியலைக் கடந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்று மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் கோரிக்கை விடுத்து இருந்தார். இதையடுத்து, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 கோடி நிதியும், 14 லாரிகளில் நிவாரணப் பொருட்களும் அனுப்பிவைப்பதாகவும், 72 மின் ஊழியர்கள் சீரமைப்பு பணிக்காக வருவதாகவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டரி்ல தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் ரூ.10 கோடி நிதி அளித்தமைக்கு மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறுகையில், “ கஜா புயல் நிவாரண நிதியாகத் தமிழகத்திற்கு கேரள அரசு சார்பாக ரூபாய் 10 கோடியை அளித்தற்குக் கேரள முதல்வருக்கு நன்றி. வேண்டுகோள் வைத்த 24 மணி நேரத்திற்குள் துரிதமாக நடவடிக்கை எடுத்த உங்கள் செயல்பாடு மனிதத்தின் வெளிப்பாடு” எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT