தமிழகம்

கஜா புயல்; உயிரை துச்சமென மதித்து பணியாற்றும் கண்டக்டர்: மின் கம்பிகளை அகற்றி பேருந்தை வழி நடத்தும் துணிகரம்

செய்திப்பிரிவு

கஜா புயல் கடுமையாக தாக்கிய வேதாரண்யத்தை நோக்கி சென்ற பேருந்தின் இளம் கண்டக்டர் வழி நெடுக சாலையில் கிடக்கும் மின் கம்பிகளை அகற்றி பேருந்தை வழி நடத்தி வேதரண்யம் சென்று சேர்ந்துள்ளார். அவரது செயல் வைரலாகியுள்ளது.

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளில் சாமானிய மக்கள் எந்த தியாகத்தையும் செய்ய தயாராகும் போதுதான் மனிதகுலம் காக்கப்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் நம்மிடையே சாதாரணமாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள், இக்கட்டான சம்பவங்கள் நம்மை இவர்களுக்கு அடையாளம் காட்டுகின்றது.

பேரிடர் நேரங்கள் மக்களுக்கு இடையூறு பலருக்கு செய்தி, பணியாற்றுபவர்களுக்கு அது சாகசமான உயிரை பணயம் வைக்கும் நிகழ்வு. அந்த வகையில் நேற்று சில சம்பவங்கள் புயலடித்த பகுதிகளில் நடந்துள்ளது. புயல் தீவிரமாக தாக்கிய நாகை மாவட்டத்தில் பேருந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

புயல் கடுமையாக தாக்கிய வேதாரண்யத்தில் ஈசிஆர் சாலையில் போக்குவரத்தை பாதிக்கும் வண்ணம் சாலையில் குறுக்கே செல்லும் மின்கம்பிகள் அறுந்துக் கிடந்தன, மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்து கிடந்தது. இவை அத்தனைக்கும் நடுவில் போக்குவரத்து ஊழியர்கள் பேருந்துகளை இயக்கி பொதுமக்களை பாதுகாப்பாக ஊர்ச்சேர்ப்பது மெச்சத்தகுந்தப் பணி ஆகும்.

இன்று காலையில் வேதாரண்யம் நோக்கி சென்ற பேருந்தின் நடத்துனர் சாலையில் குறுக்கே தாழ கிடக்கும் மின் கம்பியை ஈரமாக உடைந்துக்கிடக்கும் மரக்கிளையையை வைத்து தூக்கிப்பிடித்து பேருந்தை கடந்துச் செல்ல முயற்சி எடுக்கும் காணொளி காட்சி வைரலாகி வருகிறது. மின் கம்பியில் ஒருவேளை மின்சாரம் இருந்தால் அவர் உயிர் நொடிப்பொழுதில் போய்விடும் என அறிந்தும் பயணிகளை கொண்டுச்சேர்க்கும் எண்ணத்தில் அவர் எடுத்த முயற்சி பாராட்டப்படுகிறது.

சென்னை கோயம்பேட்டைச் சேர்ந்த பாலபைரவன் என்கிற அந்த நடத்துனர் சென்னையிலிருந்து வேதாரண்யம் செல்லும் அரசு போக்குவரத்து பேருந்தில் நடத்துனராக உள்ளார். நேற்று புயல் அடிக்கும் நேரத்தில் சென்னையிலிருந்து கிளம்பிய பேருந்தில் நடத்துனராக பணிக்கு கிளம்பிய அவர் வழி முழுதும் குறுக்கே கிடந்த மரங்களை, மின் கம்பிகளை அகற்றி பேருந்துச் செல்ல வழி வகுத்து கொடுத்துள்ளார்.

ஈசிஆர் சாலையில் வேதாரண்யம் செல்லும் ப்புவைத்தேடி என்கிற இடத்தில் சாலையில் குறுக்காக தாழக்கிடந்த உயர் அழுத்த மின்கம்பியை அங்குள்ள ஒரு மரக்கிளையை வைத்து தூக்கிப்பிடித்து பேருந்துச் செல்ல வழி ஏற்படுத்தியதை அங்கு பணியில் இருந்த ஆங்கில தொலைக்காட்சியின் செய்தியாளர் வீடியோவாக எடுத்து அவரிடம் பேச்சுக்கொடுக்கிறார்.

அப்போது அவர் தனது, பெயர் ஊர் பற்றிய விபரத்தை கூறியுள்ளார். மின் கம்பியில் மின்சாரம் இருந்தால் உங்கள் உயிர்போய்விடும் அல்லவா என்று கேட்டபோது மின்சாரம் இல்லை என்பது எனக்கு ஓரளவு தெரியும் என்று கூறியுள்ளார். நாகையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது என்றாலும் மின்கம்பியில் மின்சாரம் உள்ளதா? இல்லையா? என்கிற பயத்தில் யார் அதை அகற்ற முன் வருவார்கள்.

நடத்துனர் பாலபைரவனின் துணிச்சலும், வேலையில் அவருக்குள்ள நேர்மையும் பயணிகளை கொண்டுச்சேர்க்க வேண்டும் என்கிற கடமை உணர்வும் மெச்சத்தகுந்தது. மேலும் அதன் பின்னர் அவர் வேதரண்யம் சந்திப்பில் நுழைந்தபின்னர் அங்கு போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. சட்டென்று இறங்கி சாலையில் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் இறங்கியுள்ளார்.

இதுப்போன்ற மக்கள் பணியை சேவை மனப்பான்மையுடன் செய்யும் ஊழியர்கள் பாராட்டத்தகுந்தவர்கள், செய்யுமா போக்குவரத்து கழகம்.  

SCROLL FOR NEXT