காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து கடற்கரையோரம் நிலை கொண்டுள்ளதால் அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழையும், சென்னையில் சில நேரம் இடியுடன் கூடிய மழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்ததாவது:
“நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து அதே பகுதியில் நிலை கொண்டிருக்கிறது.
இது அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவை கடற்கரையோரம் நிலை கொள்ளக் கூடும். மேலும் இது அடுத்து வரும் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
அடுத்து வரும் 24 மணி நேரங்களில் பெரும்பாலான இடங்களில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் மிதமழையும், ஒருசில இடங்களில் கன மழையும் ஒரு சில இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும்.
காஞ்சிபுரம், புதுவை, விழுப்புரம், நாகை, காரைக்கால், திருவாரூர், தஞ்சை, அரியலூர், புதுக்கோட்டை, கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பதிவாகியுள்ளது. அதிகபடசமாக செங்கோட்டையில் 8 செ.மீ. மழையும், மணிமுத்தாறில் 6.செ.மீ. மழையும், பாம்பன், பாபநாசம், திருச்செந்தூர் 5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
சென்னை மற்றும் புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில நேரம் இடைவெளிவிட்டு மழை அல்லது இடியுடன் கூடிய மழைப் பெய்யக்கூடும்.
குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தொடர்ந்து கடற்கரையோரம் நிலை கொண்டுள்ளது. அது மேற்கு திசை நோக்கி நகர்ந்து தமிழகம் மற்றும் புதுவை கடற்கரையோரம் வரும் அது தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது.”
இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.