தமிழகம்

நக்கீரன் கோபால் மீதான வழக்கு; குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய கூடாது: சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவு

செய்திப்பிரிவு

மாணவிகளை தவறான பாதைக்கு வழி நடத்தியதாக அருப்புக்கோட்டை கல்லூரி  பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநரின் தலையீடு குறித்து ஏப்ரல் மாதம் வெளியான கட்டுரை தொடர்பாக ஆளுனர் மாளிகையிலிருந்து புகார் அளிக்கபட்டது.

அதில் நக்கீரன் ஆசிரியர் கோபால் மற்றும் 34 ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்த ஜாம் பஜார் காவல் நிலையத்தினர்,  அக்டோபர் 9-ம் தேதி  நக்கீரன் கோபாலை கைது செய்தனர். ஆனால், அந்த வழக்கில் பயன்படுத்தப்பட்ட 124 சட்டப்பிரிவு பொருந்தாது என எழும்பூர் நீதிமன்றம் நக்கீரன் கோபாலை அன்று மாலையில் விடுவித்தது.

இந்நிலையில் தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி நக்கீரன் ஊழியர் பொன்னுசாமி உள்ளிட்ட 9 பேர் ((நிர்வாகம் மற்றும் விற்பனை பிரிவு)) சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கில் தங்களுக்கும், கட்டுரைகள் வெளியானதற்கும் எந்த தொடர்பு இல்லை எனவும் தங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளனர்.

இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த்,  ஜாம்பஜார் காவல் நிலைய ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவிட்டதுடன், மறு உத்தரவு வரும் வரை எழும்பூர் நீதிமன்ற வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கூடாது என்று உத்தரவிட்டார். கைது செய்ய மறுத்த மாஜிஸ்திரேட் உத்தரவை எதிர்த்து ஜாம்பஜார் ஆய்வாளர் தொடர்ந்த வழக்கோடு இணைத்து விசாரிப்பதாக கூறி வழக்கை நவம்பர் 29-ம் தேதி ஒத்திவைத்தார்.

முன்னதாக:

கடந்த அக்டோபர் 9-ம் தேதி அன்று கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால் அன்றே எழும்பூர் 13-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நீதித்துறை நடுவர் கோபிநாத் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது,  ஊடகப் பிரதிநிதியாக மூத்த பத்திரிகையாளர் என்.ராம் ஆஜராகி நக்கீரன் கோபாலை தவறான சட்டத்தில் சிறையில் அடைத்தால் தவறான முன்னுதாரணமாகிவிடும் என வாதிட்டார்.

இதையடுத்து நீதித்துறை நடுவர், நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க மறுத்து, இந்திய தண்டனைச் சட்டம் 124 பிரிவின் கீழ் இந்த வழக்குப் பதியப்பட்டிருப்பது பொருந்தாது எனவும் உத்தரவிட்டார். இதையடுத்து நக்கீரன் கோபால் விடுவிக்கப்பட்டார்.

எழும்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விடுவித்தை எதிர்த்து ஜாம்பஜார் காவல் நிலைய ஆய்வாளர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மூத்த பத்திரிகையாளர் எதனடிப்படையில் வாதிட அனுமதித்தீர்கள் என மாஜிஸ்திரேட் விளக்கமளிக்க நவம்பர் 20-ம் தேதி உத்தரவிடப்பட்டு வழக்கு நவ.29-க்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஊழியர்கள் வழக்கையும் சேர்த்து அன்றே விசாரிப்பதாக நீதிபதி அறிவித்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யக்கூடாது என்று உத்தரவையும் அளித்துள்ளார்.

SCROLL FOR NEXT