விருத்தாசலம் வட்டம் ஆதண்டார்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (46), கூலித்தொழிலாளி. இவருக்கும் மனைவி உஷாவுக்கும் ஏற்பட்ட சண்டையில் உஷா கோபித்துக்கொண்டு அருகிலுள்ள உறவினர் வீட்டிற்குச் சென்று விட்டார். கடந்த 28-7-2017 அன்று, அருகில் வசித்து வந்த 13 வயது சிறுமியை தனது வீட்டுக்கு சென்று, கணவர் குமார் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று பார்த்து வருமாறு உஷா கூறியுள்ளார். அதன்படி சிறுமியும் குமாரின் வீட்டுக்குச் சென்றபோது, சிறுமியை குமார் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார். இதுகுறித்து வெளியில் கூற கூடாதென கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த அண்டைவீட்டார் குமாரை பிடித்து நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்த வழக்கின் விசாரணை கடலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி டி.லிங்கேஸ்வரன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இதில் நேற்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில், குற்றவாளி குமாருக்கு 4 பிரிவுகளின் கீழ் மொத்தம் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.