நாகை-வேதாரண்யம் இடையே நேற்று முன்தினம் நள்ளிரவில் கஜா புயல் கரையை கடந்தது.
கஜா புயலின் தாக்கத்தால் புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதிகள் மட்டுமில்லாமல், மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் பாதிக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் நூற்றுக் கணக்கான மின்கம்பங்கள் சாய்ந் ததால், புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப் பட்டது.
கஜா புயல் காரணமாக மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை, பலா, தென்னை என பல்லாயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்தன. இதனால், விவசாயிகள் பலரும் வேதனையடைந்துள்ளனர்.
7 பேர் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி அருகேயுள்ள மங்கள நாட்டைச் சேர்ந்த காசிநாதன், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது மரம் வீட்டின் மீது விழுந்ததில் உயிரிழந்தார். அதேபோல, ஆலங்குடி அருகேயுள்ள பாட்டி கோட்டையை சேர்ந்த ரங்கசாமி, தனது வயலில் பம்புசெட்டில் தூங்கியபோது கட்டிடம் இடிந்து விழுந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இவர்கள் உட்பட மாவட்டம் முழுவதும் கஜா புயல் பாதிப்பால் 7 பேர் உயிரிழந்தனர்.
சாலைகளில் விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. அதுபோல, சாய்ந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் மின்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி கஜா புயல் காரணமாக சரிந்து விழுந்தது. இதனால், இந்த சாலையில் சில மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கரூர் மாவட்டத்தில்...
கரூர் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது.
குளித்தலை அருகே தண்ணீர்ப்பள்ளி, தோகைமலை அருகே வெள்ளப்பட்டி, அரவக்குறிச்சி அருகே செல்லிவலசு மற்றும் கடவூர் பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன. இவை நேற்று அகற்றப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. கடவூர் பகுதியில் 5-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
கரூர், குளித்தலை, பள்ளபட்டி, அரவக்குறிச்சி, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. காற்றின் காரணமாக நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் கீழே விழுந்தன. குளித்தலையில் காற்றுடன் மழை பெய்ததால், கடைகளில் வைக்கப்பட்டிருந்த பெயர் பதாகைகள் கிழிந்தன.
குளித்தலையை சுற்றியுள்ள நங்கவரம், மேலக்குட்டப்பட்டி, குட்டப்பட்டி, மணத்தட்டை, கே.பேட்டை, சூரியனூர், நச்ச லூர், பொய்யாமணி, இரண்ய மங்கலம் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான குலை தள்ளும் நிலையில் இருந்த வாழைகள் காற்றில் சாய்ந்தன. சேதமடைந்த வாழைகளுக்கு அரசு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மழையால் மாவட்டம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு(மி.மீட்டரில்):
மைலம்பட்டி 42, பஞ்சப்பட்டி 38.20, பாலவிடுதி 37.20, தோகைமலை 31, கிருஷ்ணராயபுரம் 30, கடவூர் 28.20, மாயனூர் 26, அரவக்குறிச்சி மற்றும் அணைப்பாளையம் தலா 19, குளித்தலை 18.20, க.பரமத்தி 15.60, கரூர் 13. மாவட்டத்தில் மொத்தம் 317.40 மி.மீட்டரும், சராசரியாக 26.45 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில்...
அரியலூர் மாவட்டத்தில் கஜா புயலால் லேசான காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்தது. மதியம் 1 மணிக்கு மேல் மழை இல்லை. உடையார்பாளையம் பகுதியில் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் இருந்த மரங்கள் சாய்ந்து விழுந்தன. திருமானூர், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் மின்கம்பங்கள் உடைந்து விழுந்தன. இதனால் சில பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. காலை 9 மணிக்கு மேல் முறிந்து விழுந்த மரங்கள் படிப்படியாக அகற்றப்பட்டு, மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டு, மின்சாரம் விநியோகிக்கப்பட்டது.
அரியலூர் எஸ்.பி ஸ்ரீனிவாசன் உத்தரவின்பேரில், காவல்துறையினர் 3 குழுக்களாக பிரிந்து, உடையார்பாளையம், வேலப்பன்செட்டி ஏரி, ஜெயங்கொண்டம் சீனிவாச நகர், கீழப்பழுவூரை அடுத்த பொய்யூர், மேலப்பழுவூர் ஆகிய இடங்களில் வேரோடு சாய்ந்த மரங்கள் மற்றும் முறிந்து விழுந்த மரக்கிளைகளை அகற்றி போக்குவரத்தை சீர்செய்தனர். மேலும், குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. உடையார்பாளையம் பகுதியில் சாலையில் விழுந்து கிடந்த மரங்களை அகற்றும் பணிகளை ஆட்சியர் எம்.விஜயலட்சுமி பார்வையிட்டு, பணிகளை துரிதப்படுத்தினார்.
பெரம்பலூர் மாவட்டத்தில்...
பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்தக் காற்றுடன் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. நேற்று காலை அவ்வப்போது விட்டு விட்டு பெய்த மழை மதியம் முற்றிலும் நின்றுவிட்டது.
பலத்தக் காற்றால் சில இடங்களில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந் தன. அரும்பாவூரை அடுத்த மலையாளப் பட்டியில் 6 மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் ஆங்காங்கே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. செல்போன் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டது. குரும்பலூரைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் வயலில் பயிரிட்டிருந்த 350-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.
இந்த மழை, வாழை பயிரிட்ட சில பாதிப்புகளை ஏற்படுத்தி யிருந்தாலும், மாவட்டத்தில் பல் வேறு பகுதிகளில் மானாவாரி பயிராக மக்காச்சோளம், பருத்தி பயிரிட்டுள்ள விவசாயிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. போதிய மழை இல்லாததால் கருகத் தொடங்கிய மக்காச்சோளப் பயிர்களுக்கு, இந்த மழை பெரிய ஆறுதலாக அமைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என நேற்று காலை மிகவும் தாமதமாக அறிவிக்கப்பட்டது. இதனால் மாணவ, மாணவிகள் பலர் கொட்டும் மழையிலும் பள்ளிக்குச் சென்று, வீடு திரும்பியதால் மிகுந்த அவதியடைந்தனர். மாவட்டத்தில் பேரிடர் குறித்த தகவல் தெரிவிக்க வேண்டிய பேரிடர் மேலாண்மை தொலைபேசி எண் 1077 நேற்று பெரும்பாலான நேரம் செயல்படவில்லை. இதனால் பாதிப்பு குறித்த விவரங்களை தெரிவித்து உடனடி நிவாரணம் தேட முடியாமல் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று காலை வரை பதிவான மழையளவு(மில்லி மீட்டரில்):
செட்டிக்குளம் 3, பெரம்பலூர் 40, வேப்பந்தட்டை 35, தழுதாளை 23, பாடாலூர் 7, அகரம் சீகூர் 50, புதுவேட்டக்குடி 42, எறையூர் 37, லப்பைக்குடிகாடு 42, கிருஷ்ணாபுரம் 13, வி.களத்தூர் 16. மாவட்டத்தின் சராசரி மழையளவு 28 மி.மீ.