மழை எச்சரிக்கையைத் தொடர்ந்து சென்னை, விழுப்புரம் , காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (வியாழன்)விடுமுறை அளித்துள்ளதாக ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக கடற்கரைப் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக காரைக்கால், தரங்கம்பாடியில் 7 செ.மீ. மழையும், சிதம்பரம், பரங்கிப்பேட்டை, அதிராம்பட்டினம், சென்னை, காஞ்சிபுரம், கும்பகோணம், செம்பரம்பாக்கம் பகுதிகளில் 5 செ.மீ. மழையும் பதிவானது.
வடதமிழகப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும். சென்னை மற்றும் அதன் புற நகரங்களைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னையில் நேற்றிரவுமுதல் மழை பெய்து வருகிறது.
புறநகர் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளில் தொடர்மழை பெய்து வருகிறது. நாளையும் மழை தொடர்வதால் சென்னை, விழுப்புரம், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிக் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.