பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள்நலப் பணியாளர்களுக்கு தமிழக அரசு மீண்டும் பணி வழங்கவேண்டும் என்று உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
இந்த வழக்கின் தீர்ப்பில் நீதிபதிகள் என்.பால் வசந்தகுமார், எம்.சத்திய நாராயணன் கூறியிருப் பதாவது:
மக்கள்நலப் பணியாளர்கள் பணியில் நியமிக்கப்பட்டபோது, வயது வந்தோர் கல்வி, முறை சாராக் கல்வி, கிராமப்புற சுகாதாரம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன், சிறுசேமிப்பை ஊக்கப்படுத்தும் பிரச்சாரம் போன்றவை அவர்களது பணிகள் என கூறப்பட்டது. மக்கள் மத்தியில் மதுவின் தீமைகள் குறித்து அவர்கள் பிரச்சாரம் செய்யவேண்டும் என்றும் கூறப் பட்டுள்ளது.
தமிழகத்தில் மது விற்பனை மூலம் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. கடந்த 2013-14-ம் ஆண்டில் மட்டும் மது விற்பனை மூலம் அரசுக்கு ரூ.21 ஆயிரத்து 641 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஆண்டுக்கு ஆண்டு இந்த வருவாய் அதிகரிக்கிறது.
ஆனாலும், மதுபானம் விற்பனை மூலம் கிடைத்த வருவாயில் வெறும் 0.004 சதவீதத் தொகையை மட்டுமே மதுபானத்துக்கு எதிரான பிரச்சாரத் துக்காக அரசு செலவிட்டுள்ளது. மதுபானத்தின் தீமைகள் குறித்த பிரச்சாரம் தமிழகத்தில் தீவிரமாக நடக்கவில்லை என்பது இதன்மூலம் தெரிகிறது.
மதுவின் தீமைகள் குறித்து ஏழைகள், கல்வியறிவு இல்லா தவர்கள், பெண்கள், மாணவர்கள் மத்தியில் தீவிரமாக பிரச்சாரம் செய்வதற்கு அதிக மனித சக்தி அவசியம். மதுவுக்கு எதிரான பிரச்சாரம் என்பது அரசின் சட்டபூர்வமான கடமை.
இந்த சூழலில், மது எதிர்ப்பு பிரச்சாரப் பணிகளைச் செய்யவேண்டும் என்ற நோக்கில் நியமிக்கப்பட்ட மக்கள்நலப் பணியாளர்களை, மது எதிர்ப்பு தொடர்பான பணிகளில் நியமிக் கலாம்.
மேலும், அம்மா திட்டங்கள் என்ற பெயரில் மலிவு விலை உணவகம், மருந்தகம், குடிநீர் பாட்டில் விற்பனை, உப்பு விற்பனை, மளிகைப் பொருள்கள் விற்பனை, காய்கறி விற்பனை என பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டங்களுக்காக பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தப் பணிகளை மேற்கொள்ளவும் அதிக மனித சக்தி தேவை.
அதேபோல, அரசுப் பள்ளிகள், உள்ளாட்சி அமைப்புகள், பல்வேறு அரசு அலுவலகங்களில் அலுவலக உதவியாளர்கள், காவலர்கள் போன்ற கீழ்நிலைப் பணிகள் ஏராளமாக காலியாக உள்ளன. இதுபோன்ற பணியிடங்களிலும் மக்கள்நலப் பணியாளர்களை நியமனம் செய்யலாம்.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.