தமிழகம்

9 மாவட்டங்களில் எக்ஸ்பிரஸ் வேகத்தில் மின் சீரமைப்புப் பணிகள்: களத்தில் 11 ஆயிரம்பேர்

செய்திப்பிரிவு

கஜா புயலினால் தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியதால் தமிழக அரசு மின்கம்பங்களை சீரமைக்க போர்க்கால நடவடிக்கைகளில் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

கடுமையான புயல் காற்றினால் மின்கம்பங்கள், மின் கம்பிகள் மீது மரங்கள் விழுந்தன.மின்கம்பங்களை சீர்செய்ய கடலூர், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 11 ஆயிரத்து 371 பேர் ஈடுபட்டு வருவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

புயல்பாதித்த ஆறு மாவட்டங்களில் 420 முகாம்கள் அமைக்கப்பட்டு 1 லட்சத்து 11 ஆயிரம் பேர் தங்கவைக்கப்பட்டு உரிய நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

வேதாரண்யம் போன்ற பகுதிகளில் நான்கு பக்கமும் பாதைகள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் அதிகாரிகள் நேரடியாக இருசக்கர வாகனங்களில் கடலோர சாலைகள் வழியாகவே சென்று உதவிகளை வழங்கி வருகின்றனர்.

‘கஜா’ புயலால் நாகை, வேதாரண்யம் வேளாங்கண்ணி பகுதிகள் உருக்குலைந்து காணப்படுகிறது. புயல் காற்றின்  சீற்றத்தினால் வேளாங்கண்ணியில் பைபர் படகுகள் கடலிலிருந்து சாலைப்பகுதிகளில் வீசியெறியப்பட்டுள்ளன.

புயலின் தாக்கத்தினால் கும்பகோணத்தில் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்துவிழுந்தன. இப்பகுதியில் பல லட்சம் மதிப்புள்ள பயிர்கள் நீரில் மூழ்கின.

கொடைக்கானல் சாலையில் சுற்றுலா வாகனம் மீது மரம் விழுந்ததில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் உதவிகள்; ஹெல்ப் லைன்கள்

‘கஜா’ புயல் பாதிப்பு ஏற்பட்ட மாவட்டங்கள் தமிழக அரசு முழுவீச்சில் நிவாரண மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் பல மாவட்டங்களில் சாலைப்போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மக்கள் தங்களுக்கு தேவையான உதவிகளை உடனுக்குடன் பெறுவதற்கு ஏற்ற வகையில் தமிழக அரசு உதவிமையங்களை அமைத்துள்ளது.

புயல் பாதிப்பின் தாக்கம் அதிகம் உள்ள ஆறு மாவட்டங்களில் தமிழக அரசு அமைத்துள்ள உதவி மையங்களின் ஹெல்ப்லைன் எண்கள் வருமாறு:

நாகப்பட்டினம்: 9443500728, 9843810579, 9003322566

கடலூர் - 04142- 220700

திருவாரூர் - 04366 -226623

புதுக்கோட்டை - 04322 -222207

தஞ்சாவூர் 04362 230121

ராமநாதபுரம் - 04567 - 230060

SCROLL FOR NEXT