தமிழகம்

50 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்த மூத்த வழக்கறிஞர்களுக்கு கவுரவம்: தலைமை நீதிபதி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்

செய்திப்பிரிவு

சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள பாரம்பரிய வழக்கறிஞர் சங்கமான மெட்ராஸ் பார் அசோசி யேஷன் சார்பில் 50 ஆண்டுகள் சிறப்பாகப் பணிபுரிந்த 14 மூத்த வழக்கறிஞர்களை தலைமை நீதிபதி வி.கே.தஹிலரமானி கவுரவித்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

ஒவ்வொரு ஆண்டும் நவ.26-ம் தேதியன்று சட்ட தினம், வழக் கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர் சங்கங்களின் சார்பில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகி றது. சென்னை உயர் நீதிமன்றத்தின் பழமையான பாரம்பரியமிக்க மெட்ராஸ் பார் அசோசியேஷன் (எம்பிஏ) சார்பில் சட்ட தின விழா நேற்று சங்க அரங்கில் நடந்தது.

இவ்விழாவில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹிலரமானி பங்கேற்று சட்ட தின உறுதிமொழியை வாசிக்க, சக நீதிபதிகளான வினீத் கோத்தாரி, எஸ்.மணிக்குமார், சி.டி.செல்வம், என்.கிருபாகரன், எம்.எம்.சுந்தரேஷ், கே.ரவிச்சந்திரபாபு, எஸ்.வைத்தியநாதன், வி.பாரதிதாசன், எம்.வி. முரளிதரன், வி.பார்த்திபன், ஆர்.சுரேஷ்குமார், எம்.எஸ்.ரமேஷ், பி.புகழேந்தி உட்பட மூத்த வழக்கறிஞர்கள் பலர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

பின்னர், உயர் நீதிமன்றத்தில் 50 ஆண்டுகள் சிறப்பாகப் பணிபுரிந்த மெட்ராஸ் பார் அசோசியேஷனைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர்களான ஏ.எல்.சோமயாஜி, முனைவர் பி.எச். பாண்டியன், வி.ராதாகிருஷ்ணன், எம்.வெங்கடாச்சலபதி மற்றும் வழக்கறிஞர்களான ஆர்.பாலச்சந் தர், எஸ்.துரைராஜ், ஆர்.கோபால கிருஷ்ணன், ஆர்.லோகப்பிரியா, எஸ்.முத்துராமலிங்கம், எஸ்.ஏ.கே.நவாஸ், எஸ்.ராதாகோபாலன், ஜி.கே.செல்வராஜன், எஸ்.சுப்பையா, எம்.எஸ்.சுப்ரமணியம் ஆகியோருக்கு தலைமை நீதிபதி வி.கே.தஹிலரமானி பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

சங்கத்தின் சார்பில் பொன்னாடை போர்த்தப்பட்டு, சட்டப் புத்தகங்கள் பரிசளிக்கப் பட்டன.

விழாவுக்கான ஏற்பாடுகளை அரசு தலைமை வழக்கறிஞரும், மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவருமான விஜய் நாராயண், சங்கச் செயலாளர் வி.ஆர்.கமலநாதன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் செய்திருந்தனர்.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் (எம்எச்ஏஏ) சார்பில் நடந்த சட்ட தின விழாவில் நீதிபதி ஆர்.மகாதேவன் பங்கேற்று நீதிமன்ற டைரியை வெளியிட அதை சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். விழாவில் சங்கச் செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார், துணைத் தலைவர் ஆர்.சுதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

உயர் நீதிமன்ற மற்றும் கீழமை நீதிமன்றங்களின் பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடந்த சட்ட தினவிழாவில் நீதிபதி எஸ்.ராமதிலகம் பங்கேற்றுப் பேசினார். விழா ஏற்பாடுகளை சங்கத் தலைவர் வி.நளினி, செயலாளர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT