தமிழகம்

பெண்ணின் இரைப்பையில் 152 இரும்புப் பொருட்கள்: அறுவைச் சிகிச்சை மூலம் அரசு டாக்டர்கள் அகற்றினர்

செய்திப்பிரிவு

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் எஸ்.லட்சுமி (35). சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவர். மூச்சுவிட முடியாமலும், கை மற்றும் கால் வீங்கிய நிலையிலும் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டாக்டர்கள் குழுவினர், எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது, அவரது வயிற்றில் உள்ள இரைப்பையில் ஏராளமான இரும்புப் பொருட்கள் இருப்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

இரைப்பை குடல் அறுவைச் சிகிச்சைத் துறை தலைவர் டாக்டர் எஸ்.எம்.சந்திரமோகன், டாக்டர் கண்ணன் தலைமையிலான குழுவினர், கடந்த பிப்ரவரி மாதம் லட்சுமிக்கு அறுவைச் சிகிச்சை செய்து இரைப்பையில் இருந்த இரும்புப் பொருட்களை வெளியே எடுத்தனர். அதன்பின் மனநல டாக்டர்கள் முறையான கவுன்சிலிங் மூலம் லட்சுமியின் மனநிலை பாதிப்பை சரிசெய்தனர்.

இதுதொடர்பாக, மருத்துவமனை டீன் டாக்டர் விமலா, டாக்டர் எஸ்.எம்.சந்திரமோகன் ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

மனநிலை பாதிக்கப்பட்ட லட்சுமி, தன்னை அறியாமல் இரும்புப் பொருட்களை வாயில் போட்டு விழுங்கி இருக்கிறார். இதனால் அவருக்கு உடலில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இரைப்பையில் இருந்த இரும்புப் பொருட்களை எண்டோஸ்கோப்பி கருவி மூலம் வெளியே எடுத்தால் உணவுக் குழாய் மற்றும் தொண்டையை கிழித்துவிடும் அபாயம் இருந்தது. அதனால் அறுவை சிகிச்சை மூலம் சுமார் 1 மணி நேரம் போராடி இரும்புப் பொருட்களை வெளியே எடுத்தோம்.

அவருடைய இரைப்பையில் ஆணிகள், திருகாணி, காசு, இரும்பு சங்கிலி, பாசி மாலை, உடைந்த குண்டூசி, கொண்டை ஊசி, காந்தம், சாவி என 152 வகையான இரும்பு பொருட்கள் இருந்தன. தற்போது லட்சுமி மனநிலை பாதிப்பு சரியாகி நன்றாக இருக்கிறார்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT