தமிழகம்

தென் மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தகவல்

செய்திப்பிரிவு

டெல்டா மாவட்டங்களில் நாளை மழை குறைந்து தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

தமிழக நிலப்பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை செயலிழந்து மேலடுக்கு சுழற்சியாக ஒட்டுமொத்த தமிழகம், கேரள நிலப்பரப்புக்கு மேலே நீடிக்கிறது.  அரபிக்கடலில் தற்போது வேறொரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது. இந்த மேலடுக்கு சுழற்சி அதனுடன் இணைந்து வலுப்பெறும் என கருதப்பட்டது.

ஆனால் மேலேடுக்கு சுழற்சி தமிழகத்திலேயே நிலவி வருகிறது. இதனால் டெல்டா மாவட்டங்களான நாகை, தஞ்சாவூர், திருவாரூரில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் தொடங்கி சென்னை வரை மழை படிப்படியாக விலகி வருகிறது. இதுபோலேவே அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் வரை மழை நீடிக்கிறது. நாளை இந்த நிலை மாறும்.

டெல்டா மாவட்டங்களில் மழை படிப்படியாக குறையும். காற்றழுத்த தாழ்வு நிலை, கிழக்கு காற்றை ஈர்ப்பதால் தென் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. விருதுநகர், திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு இந்த மழை பெய்யலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT