'கஜா' புயல் பாதிப்பில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு நிவாரண உதவியாக ரூ.10 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் முதல்வர் பழனிசாமி கூறியதாவது:
''வடகிழக்குப் பருவமழை காலத்தில் எவ்வாறெல்லாம் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று புயல் வருவதற்குமுன்பே ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் உரிய அதிகாரிகள் மற்றும் அனைத்து துறை சார்ந்த அமைச்சர்களும் கலந்துகொண்டு வழங்கப்பட்ட ஆலோசனைகளின்படி தற்போது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இரவு சுமார் அதிகாலை 2.30 மணியளவிலே 110 கி.மீ.வேகத்தில் புயல்காற்று வீசியது பதிவாகியுள்ளது. இதனால் நாகை மாவட்டத்தில் அதிகமாகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுவரை எங்களுக்கு 11 பேர் இறந்ததாக தகவல் கிடைத்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும். படுகாயம் அடைந்தவர்களுக்கு 1 லட்சமும் சிறு காயம் அடைந்தவர்களுக்கு 25 ஆயிரமும் வழங்கப்படும்.
மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து விரைந்து தகவல்கள் பெறப்பட்டு வருகிறது. முழுமையாக அறிந்த பிறகே அவர்களுக்கான நிவாரணம் குறித்து விரைவில் தெரிவிக்கப்படும்.
இதுவரை 11 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மின்கம்பங்கள் உள்ளிட்ட அனைத்து சேதாரங்கள் குறித்த கணக்கெடுப்பும் நடைபெற்று வருகின்றன. எவ்வளவு இழப்பு என்பது விரைவில் கணக்கிடப்படும்.
இன்று மாலை வரை மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி தெரிவித்துள்ளது. இயற்கைச் சீற்றத்தில் மக்களைப் பாதுகாக்க அனைத்து துறையினருக்கும் மாவட்ட அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டங்களிலேயே தங்கியிருந்து பாதுகாப்பு மற்றும் உதவிப் பணிகளை மேற்கொள்ளும்படி அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இயற்கைச் சீற்றத்திலிந்து மக்களைக் காக்க மக்களுக்குத் தேவையான உதவிகளையும் பாதுகாப்பையும் அரசு போர்க்கால நடவடிக்கைளில் செய்து வருகிறது.
மீன்வளத்துறை, வருவாய்த்துறை இரண்டும் சேர்ந்து கரையோரம் தரையோரமாக வைக்கப்பட்டிருந்த படகுகள் எல்லாம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் பெறப்பட்டுள்ளது.
'கஜா' புயலால் அதிக மரங்கள் சாலையில் சாய்ந்திருக்கின்றன. அப்படி சாய்ந்த மரங்களையெல்லாம் அகற்றும் பணிகளில் எல்லாம் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சாலையில் சாய்ந்த மரங்களையும் அறுத்து அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
ஏற்கெனவே அமைச்சர்கள் அங்கேயே தங்கிப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு அதன்படி அமைச்சர்கள் அந்தந்த மாவட்டங்களில் தங்கி மேற்கொண்டு வருகின்றனர்.
வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கட்டுப்பாட்டு அறையிலேயே தங்கி புயலால் எவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்று முழுவீச்சில் ஆய்வுசெய்து வருகிறார்.
புயல் பாதித்த பகுதிகள் விரைவில் இயல்பு நிலைக்கு வரும். மக்கள் அச்சப்படத் தேவையில்லை. புயலால் சேதமடைந்த பகுதிகளை நேரில் சென்று பார்வையிட உள்ளேன்
சேத விவரங்கள் பெறப்பட்டவுடன் மத்திய அரசிடம் நிவாரணம் கோரப்படும்''.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி தெரிவித்தார்.